Monday, 3 February 2014

அர்த்தநாரி திரைப்பட அறிமுகம்

இம்முறை எமது வலைப்பூ வாசகர்களுக்கு மிகவும் சிறந்த ஒர் மலையாள திரைப்படத்தை அறிமுகம் செய்கின்றோம். தற்போது அதிகமாக பேசப்படும் திருநங்கைகளைப் பற்றி எடுக்கப்பட்ட அதி அற்புதமான  இத் திரைச்சித்திரம் நிச்சயம் உங்களைச் சிந்திக்கவைக்கும்!  

அர்த்தநாரி என்கின்ற வார்த்தைக்கு பல தென்னிந்திய மொழிகளில் ஒரே அர்த்தம் தான். ஆணும் பெண்ணும் சரிசமமாக இணைந்த உருவத்திற்கே இந்தப் பெயர். இந்து மதத்தில் அர்த்தநாரீஸ்வரர் என்ற ஒர் அவதாரம் சிவன் எடுத்துள்ளார். ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் உள்ளவாறு சித்திரங்கள் வரையப்பட்டும் காவியங்கள்,
 சிற்பங்கள் செதுக்கப்பட்டும் உள்ளதை இந்துக் கோயில்களில் காணலாம்.

உண்மையில் இத்தகைய மனிதர்கள் உலகில் இல்லை, ஆனால் எவ்வாறு இத்தகையதொரு கற்பனை உருவானது என்பது கேள்விக்குறி!

உருவத்தில் ஆணாக இருந்தாலும் சிந்தனையும் செயலும் பெண்ணாக அல்லது இரண்டுமாக வாழ்பவர்கள் பலர் உலகில் உள்ளனர்.

இந்த இயற்கையின் விசித்திரப் படைப்பை உள்ளவாறு ஏற்று அத்தகையவர்களை சராசரிப் பிரஜைகளாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா , இலங்கை போன்ற தென் கிழக்காசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் இவர்களை கேலிப் பொருளாக நடத்துகின்றன.

இந்திய திரைப்படங்கள் இவர்களை மதிப்புக்குரிய கதாபாத்திரங்களாகப் படைப்பதில்லை.

மலையாளத் திரைப்பட உலகம் இதற்கு விதிவிலக்கானது. 1980, 1990களில் ஏகப்பட்ட பரீட்சார்த்தப் படங்களைத் தயாரித்த இவர்கள் அற்புதமான ஒரு திரைப்படமான "அர்த்தநாரி"யைத் தயாரித்தார்கள். சர்வதேச திரைப்படத் தரத்தில் இயக்கப்பட்ட இத் திரைப்படத்தின் கதையானது
 ஆண் உருவத்தில் பெண்ணின் குணாதிசயங்களும் நளினமும் கொண்ட ஒர் மனிதர் எவ்வாறு இவ்வுலகினரால் துன்புறுத்தப்படுகின்றார், கேலி செய்யப்படுகின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

தனது உடன்பிறப்பால், பள்ளித் தோழர், தோழிகளால், கிராமத்தவர்களால் இம்சைப்படுத்தப்பட்டு கிராமத்தை விட்டே ஒடி … வாழ்க்கைப் பாதையில் பல தடவை தடம் புரண்டு கண்ணீர் விடுவதும் எரிமலையாய் குமுறுவதும் கொலைகாரராவதும்.... அப்பப்பா எத்தனை துன்பங்கள்.

எல்லாவற்றையும் விட அவர் சில சமயங்களில் ஆணின் மன நிலையில் செயற்படுவதும், சில வேளைகளில் பெண்ணாக உணர்வதும் , செயற்படுவதும் , அதனால் ஒருபோதும் அமைதியான, இன்பமான வாழ்க்கை வாழமுடியாத நிலையும்.....

"அர்த்தநாரி" என்ற இத் திரைப்படம் மலையாள மொழியானாலும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இரசிக்கக் கூடியதாகவும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

மலையாளத் திரைப்பட உலகின் நடிகர் திலகங்களான மனோஜ் கே.விஜயன், திலகன் ,நடிகை சுகுமாரி,இன்னசன்ட்
போன்றவர்களின் அதி அற்புத நடிப்பால் உருவான இச் சித்திரமும் , இது கூறும் உண்மைகளும் , நம்மால் , இச் சமூகம் படும் துன்பங்களை எடுத்துக் காட்டி, எம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றன.


எமது வலைப்பூ வாசகர்கள் பார்க்கவும், சிந்திக்கவும் இதோ அர்த்தநாரி!


Monday, 20 January 2014

குஞ்சரமூன்றோர்........ (சிறுகதை)

 வணக்கம்


2014ல் தடைகள்,ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி நடை போடத் தொடங்கியுள்ள வலைப்பூ வாசகர்களுக்கு இன்று நாம் தருவது ஓர் சிறுகதை. காதலின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட பலரின் வாழ்வின் நிகழ்வுகள் இதில் அடக்கம்.எமது வலைப்பூவின் வாசத்தை எம்மோடு பகிரும் அனைவருக்கும்
நல்வைழ்த்துக்கள்.



"குடைநிழலிருந்து குஞ்சரமூன்றோர்

 நடை மெலிந் தோர்ஊர் நன்னிலும் நன்னுவர்!"



பட்டம் பதவி, செல்வம் என ஏகோபித்த வாழ்க்கை வாழ்ந்தோர் ஓர் நாள்

எல்லாம் இழந்து வீதிக்கு இறங்கலாம் என்ற உள் கருத்தை உடையது இப்

பாடல்,

இப் பாடலைப் பாடிக் கொண்டே அந்த வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு

உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது தன்னை அறிமுக்ப் படுத்திக் கொள்ள

எந்த பிரயத்தனமும் எடுத்துக் கொள்ளவில்லை. முற்றத்தில் கிடந்த

கதிரையில் அமர்ந்தார். அந்த காலை நேரம் முற்றம் கூட்டிக் கொண்டு நின்ற

செல்லம்மா வந்த பெண்ணின் பெயரைக் கேட்க யாதொரு முயற்சியும்

செய்யவில்லை. சித்தக் கலக்கத்தின் வெளிப்பாடு எனப் புரிந்து கொண்டு , மன

வலியோடு காத்திருந்தாள்!!!



கவி நயத்தோடு தொடர்ந்தாள்.

"சாவித்திரி சந்தித்தாள் தன் கதாநாயகனை, கல்லூரிக் காலம் கண்டதும்

காதலல்ல, கன காலம் தெரிந்தவர், மனதைக் கவரும் அழகன் , சிவந்த நிறம்

நல்ல உயரம் கவர்ச்சியான கண்கள். படிப்பில் ,பண்பில் யாரும் போட்டி போட

முடியாது  என்றெல்லாம் ஏமாந்தேன்.



உரசி உரசி பேசும் போதுலகை மறந்தேன்.

அம்மா கேளுங்கோ, எனக்கு பதினெட்டு வயது அப்ப, ஏமார்ற வயசுதானே!

ஓடிப்  போனேன்,  வீட்டில வேற சாதிப் பொடியனைக் கட்டி வைப்பினமே ?

இல்லைத்தானே ! நகை நட்டுகளையும் எடுத்துக் கொண்டு மன்னாருக்குப்

போயிட்டோம்.


சந்திரனுக்கு சொந்தக் காரர்கள் கனக்க அங்க இருந்தவை.

நல்ல சாதிப்பிள்ளை எண்டு மரியாதை எனக்கு.


கொண்டு போன நகைகளை ஒவ்வொண்டாக விக்க வேண்டி வந்தது.

சீவியத்துக்கு வழியில்லை , படிச்சு முடிச்சா தானே வேலை.

கடை போடப் போறன் எண்டு பத்துப் பவுண் பதக்கஞ் சங்கிலியைக்

குடுத்திட்டன் ; காச நான் கண்ணாலும் காணல்ல!



அம்மா நான் காசக் கண்ணாலும் காணல்ல!!

நாலஞ்சு வருசத்தில நான் நாராயிட்டன்.

பாலுஞ் சோறும் திண்டு வளந்த நான்  ... பாணுக்கும்

வழியில்ல, சீனிக்கும் வழியில்ல .

ஊத்த உடுப்பும் , ஊத்த உடம்பும்  எண்டு இருக்க....

உற்றார், பெற்றார் எல்லாம் கைவிட,

நாளாக நாளாக நலிவடைய...

ஏன் இப்படி எண்டொரு கேள்வி மனதின்

மூலையில் ஒலிக்க ஒலிக்க ........


சந்திரன்ட மாமி தாற தண்ணியைக் குடிக்க

தலை சுத்தி படுத்திடுவன்.

ஒரு வெள்ளிக்கிழமை சந்திரன்ட மாமி பவழம்

தண்ணிக்குள்ள பவுடர்தூள் கொட்டிறா,

பாத்தன் , அரை மயக்கம்; இருந்தாலும்

விழங்கிது ஏதோ பிழையெண்டு.



"அண்டு அந்த படலைலைத் திறந்து கொண்டு நடக்கிறன்,

எங்கயோ இடையில விழுந்திட்டன்."


"ஒரு hospitalல நான் படுத்திருக்கிறன் பாருங்கோ;  நல்ல மனம் கொண்ட

யாரோ என்னை அங்க விட்டிருக்கினம் .அங்க தான் சொல்லிச்சினம்

கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாகிற மருந்து எனக்குத் தந்திருக்கினம் எண்டு!"


அம்மா அப்பா கைவிடுவினமே? ஆசானிக் எண்ட அநத மருந்து என்னைக் குழப்பிட்டுது.

"பசிக்குது  அம்மா,  புட்டு தாறீங்களே?"


"என்ஜினியர் வீட்டுப் பிள்ளை நான்......."

யானை மீது ,குடைக்கீழ் அமர்ந்து,  ஊர்வலம் வந்த செல்வந்தர்  பலர்

 நடக்கவும் சகதியற்று,

 வறுமையின் கோடியில் மாண்டதை நாம் அறிவோம்!!!

  
.