Monday, 28 October 2013

பரிஸ் நகரத்தார் வாழ்க்கை



வணக்கம்

இத் தடவை உங்களுக்கு பணத்துக்காக எதுவும் செய்யும் ஒருவரை அறிமுகம் செய்கின்றோம். இச் சிறுகதையும் உண்மையான ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

சத்தியசீலனுக்கு சுற்றுவட்டாரத்தில் மதிப்பு அதிகம்.

"பாரடா சத்தியை வந்து மூன்டு வருசத்துக்குள்ள பேப்பரும் எடுத்து வேலையும் செய்து ஒரு அப்பாட்மெனும் வாங்கிட்டான்" என்று அங்கலாய்ப்பவர்கள் பலர்.

"அது சரி , ஆனால் வீட்டாரைக் கவனித்தானோ என்டால் அது ஒன்டும் செய்யல்லை. அங்க ஊரில இரண்டு அக்காமார் இருக்கினம். அம்மா தனிய, அப்பா செல் விழுந்து முள்ளியவளையில 2009ல மோசம் போயிட்டார்.” இப்படி சத்தியசீலன்ட இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டுவது மகேந்திரன், சத்தியசீலனின் தூரத்து உறவினன்

".... எங்கேயோ ஒரு பிழை இருக்கும் தானே, எல்லாத்தையும் எல்லாராலயும் சரியாச் செய்யேலாதுதானே”, சத்தியசீலனுக்கு வக்காலத்து வாங்குவது பாலகிருஷ்னன்.

"எண்டாலும் மச்சி, பெண் சகோதரிகளுடைய பிரச்சனைகளை தீர்க்காம, தனக்கு வீடு வாசல் சம்பாரிக்கிறது , மனச்சாட்சி இல்லாத
வேலை. இத்தனைக்கும் அதுகள்ட நகை நட்டுகளை வித்துத்தான் இவர் வெளியில வந்தவர்”, மகேந்திரன் தனது நிலைப்பாட்டை உறுதி செய்தான்.

இவ்வாறான கருத்து வேறுபாடுகளுக்குரிய சத்தியசீலன் வீட்டில இருந்த நகைநட்டுகளையெல்லாம் வித்து ஊருக்கிளையும் கடன் பட்டு வந்தான். அவனது அதிஷ்டம் உடனே அகதி விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எல்லாம் முள்ளியவளையில் குண்டடிக்குப் பலியான அப்பா சிவசுப்பிரமணியத்தின் அருள்.

அப்பாவை இராணுவம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சுட்டுக் கொன்றார்கள், என்னையும் தேடி வர நான் சுவரால் அடுத்த வீட்டுக்குப் பாய்ந்ததில் நெஞ்சில் காயம் என்று விண்ணப்பத்தில் எழுதினான். இதற்காக நெஞ்சில் கத்தியால் தானே தனக்குக் கீறிக் கொண்டான்.

ஆக, அகதி விண்ணப்பம் இலேசாகக் கிடைக்கவில்லை. சத்தியசீலன் அசகாயசூரன்தான்.

பிறகென்ன வேலை கிடைத்ததும், சீலன் மாய்ந்து, மாய்ந்து வேலை செய்து முதலாளி மனம் குளிர்ந்து, ஏற்கனவே அவனிடம் வேலை செய்து கொண்டிருந்த சபாலிங்கத்தை வெளியேற்றிவிட்டு சத்தியசீலனை வேலைக்கு எடுத்துக் கொண்டான். நல்ல விசயம்தான், ஆனால் ஒரேயொரு சோகம் என்னவென்றால் சத்தியசீலை அங்கு வேலைக்குச் சேர்த்தது சபாலிங்கம்தான். இப்படியான குத்துவெட்டுக்கள் இங்கு ஏராளம்.

ஏதோ ஒருவழியில் சத்தியசீலன் கடனோ உடனோ பட்டு ஒரு அபபாட்மென்டும் வாங்கிவிட்டான்.

இந்த சமயம் பார்த்து ஐரோப்பாவுக்கு வந்து மூன்று நான்கு நாடுகளுக்கிடையில் ஓடித்திருந்து விசா கிடைக்காமல் பத்து வருசமாக அலைந்த பத்மநாதனுக்து இறுதியாக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பத்து வருடமாக பிரிந்திருக்கும் மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் கூப்பிடலாம்.

ஆனால் வீடு? அது அடுத்த பிரச்சனை . நான்கு பிள்ளைகளில் இரண்டு குமர்ப் பிள்ளைகளுக்கு வயது பத்தொன்பதும், இருபதும் ஆகிவிட்டது. பதினெட்டுக்குட்பட்ட பிள்ளைகளைத்தான் தந்தை கூப்பிடமுடியும்.

இந்த நேரத்தில் சத்தியசீலனின் ஞாபகம் பத்மநாதனுக்கு வந்தது. பத்மநாதன் நேர்மையானவன். வாடகை வாங்குவதில் ஒரு பிரச்சனையும் இராது என்பதை நன்றாக அறிந்த சத்தியசீலன் பத்மநாதனுக்கு சட்டரீதீயாக உடன்படிக்கை எழுதிக் கொடுத்து, பத்மநாதனின் குடும்பமும் வந்து விட்டது.

ஒரு அறையில் சத்தியசீலனும் அடுத்த இரண்டு அறைகளில் பத்மநாதன் குடும்பமும் இருந்தார்கள். முதல் இரண்டு மூன்று நாட்கள் பத்மநாதனின் மனைவி சத்திசீலன் இரவு வேலையால் களைத்து ரும் போது, பாவம் தனியாக இருப்பவர் என்றிரங்கி" சாப்பிடுங்கோ" என்றாள். சத்தியசீலனும் சந்தோசமாக சாப்பிட்டார்.

நான்காம் ஐந்தாம் நாட்களில் யாரும் அழைக்காமலே சத்தியசீலன் மற்றவர்களுக்கும் வைக்காமல் சாப்பிட்டு விட்டார். பத்மநாதன் குடும்பம் அதிர்ந்துவிட்டது. வாடகையும் கொடுத்து சாப்பாடும் கொடுப்பதா. இதை எப்படித் தடுப்பது, சங்கடமான சமாச்சாரம் அல்லவா ?குழம்பித் தவித்தார்கள். இப்படியான , மானக்கேடான ஒரு
விசயம் ஊரில் நடக்கவே நடக்காது. பட்டினி கிடந்தாலும் ஊர்ச்சனம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

இதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என நினைத்த பத்மநாதன், சத்தியசீலனிடம், குறை நினைக்க வேண்டாம் உங்களுக்கும் சேர்த்துச் சமைக்கவில்லை என்றான்.

அதற்கு சத்தியசீலன்" நான் நீங்கள் சமைத்தால் சாப்பிடுவேன், மற்றும்படி சாப்பாட்டுக்கெண்டு காசு தரமாட்டேன்" என்றான் கூலாக.

பத்மநாதன் குடும்பம் சீலனுக்குப் பயந்து சமைக்காமல், சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன ?

பத்மநாதன் அவசரமாக வீடு தேடுகிறார்!



காசுக்காக எதுவும் செய்யத் தயாரென்றால் சம்பாரிப்பது சிரமமா?
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com

Sunday, 13 October 2013

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கல்லாரின் அட்டகாசம்

வணக்கம்




வாஸ்கொடகாமாவைத் தொடர்ந்து இந்தியாவையும் பின் இலங்கையையும் முற்றுகையிட்ட போர்த்துக்கேயரின் முக்கிய கொள்கை மதம் பரப்புவதும் வியாபாரமுமாக இருந்தது. முற்றிலும் எதிர்பாராத இந்த அட்டகாசம் இலங்கையரைச் சூறையாடியது. அந்த விபரங்களை பின் வந்த சந்ததியினர் அறியாவண்ணம்அடுத்தடுத்து வந்த ஒல்லாந்தினரும், ஆங்கிலேயரும் கோயில்களையும் ,அரசாங்க நிறுவனங்களையும் கொழுத்தி ,ஆவணங்களை எரித்து எந்த வித வரலாற்று அடையாளமும் இல்லாதொழித்தனர்.

ஆனால், அதிஷ்டவசமாக தற்போதுள்ள சூழ்நிலையில் எமது வரலாற்று ஆய்வாளர்கள் மேற்குறிப்பிட்ட காலனித்துவ நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசாங்க ஆவண காப்பகங்களில் பழைய 16ம் நூற்றாண்டு ஆவணங்களை எடுத்து ஆராய்ந்து வரலாற்று நூல்களை எமக்கு அளித்து வருகின்றார்கள்.

இத்தகைய அரிய பணியில் ஈடுபட்டுள்ள கலாநிதி முருகர் குணசிங்கம்" இலங்கையில் தமிழர்" என்ற அரிய வரலாற்று நூலை , அவர் தற்போது வசிக்கும் சிட்னி, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியிட்டுள்ளார். எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய இந் நூலில் ஒரு சிறு பகுதியை இங்கு அறிமுகம் செய்கின்றோம். போர்த்துகேயர் மதம் மாற்றக் கையாண்ட கொடூர நடவடிக்கைகளே ,மக்களை அவர்களுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்தது. இதன் விளைவு ஒல்லாந்தர் வருகை!

நாம் சென்ற வருடம் இலங்கை சென்ற போது திருநெல்வேலிக் கிராமத்திலிருக்கும் பூதவராயர் ஆலயத்தில் போர்த்துக்கேய இராணுவ வீரன் ஒருவன் அங்கிருந்த மருத மரத்தை வெட்ட முனைந்த போது கிளை முறிந்து விழுந்து அவ் வீரன் விழுந்து மரணமடைந்த வரலாற்றை அறியவும் ,அந்த மருத மரம் இன்றும் நல்ல நிலையில் பாதுகாக்கப்படுவதையும் காணமுடிந்தது. மருத மரம் இந்துக்களுக்கு , அவர்களது பிரதான தெய்வமான சிவனைக் குறிப்பதாகும். இம் மருத மரத்தின் புகைப்படத்தையும் இங்கு பிரசுரிப்பதில் பெரும் மகிழ்ச்சி எமக்கு, நீங்களும் பயனடைவீர்கள் என நம்புகின்றோம்.



"1540களில் இந்திய கிழக்குக் கரையோரங்களிலுள்ள மீனவ சமூகத்தினரிடையை போத்துக்கீச மிசனரிமார் தமது கத்தோலிக்க மதப் பரம்பல் முயற்சிகளை முன்நின்று நடத்தினர்.அதனைத் தொடர்ந்து வெவ்வேறான முயற்சிகள் 1543களில் இலங்கைக் கரையோரங்களிளும் தொடங்கப்பட்டது. போத்துக்கீசரீனால் கத்தோலிக்க மதத்தை இந்தியாவில் பரப்புவதன் பொருட்டு கோவாவிற்கு அனுப்பப்பட்ட வண .பிரான்ஸிஸ் சேவியர் என்ற கத்தோலிக்க பாதிரியார் மன்னாருக்கான தன் பயணத்தை மேற்கொண்டார்.1543ல் போத்துக்கீசருக்கும், சங்கிலி மன்னனுக்குமிடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சங்கிலி மன்னன் போத்துக்கீசருக்கு வருடந்தோறும் கப்பம் கட்டுவதற்கு ஓப்புக் கொண்டமையின் பலவீனத்தின் அடிப்படையிலேயே போத்துக்கீசர் மன்னருக்கு மேற்படி பாதிரியாரைக் கத்தோலிக்க மதப்பரப்பல் நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர். 600க்கும் அதிகமான மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கத்தைலிக்கரால் மதம் மாற்றப்பட்டனர். 1544ல் சங்கிலி மன்னன் 500 படைவீரர்களை மன்னாருக்கு அனுப்பி கத்தோலிக்கராக மாறிய எல்லோரையும் கொன்றான். இதனையே போத்திக்கீச ஆவணங்கள் "மன்னார் படுகொலைகள் "எனக் குறிப்பிடுகின்றன. மன்னாரிலுள்ள தமிழர்கள் தமது சொந்த மதத்தைவிட்டு அந்நிய மதமான கத்தோலிக்க மதத்துக்கு மாறியமை வெறுமனே மதம் சார்ந்ததாக மட்டும் சங்கிலி மன்னனின் பார்வையில் பட்டிருக்க முடியாது. அந் நடவடிக்கை தமிழ்த் தேசத்தின் அரசியல் , சமூக , பொருளாதார நிலைமகளின் அடித்தளத்தையே தகர்த்து எறிந்து நாட்டை அந்நியர் கைக்கு இட்டுச்செல்லும் என்பதை விவேகமும், அற்றலும், நாட்டுப்பற்றும், மதப்பற்றும் கொண்ட சங்கிலி மன்னனுக்கு நிச்சயம் விளங்காமல் இருந்திருக்க முடியாது. பல்வேறுபட்ட அரசியல்,சமூக,பொருளாதார,சமயக் காரணங்களின் அடிப்படையில் 1560களில் போத்துகீசர் படை யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுத்தது. சங்கிலியின் படைகள் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. போத்துக்கீசருக்கும் ,சஙகிலிக்கும் இடையில் மீண்டும் உடன்படிக்கை ஏற்பட்டது. அவற்றில் இங்கு முக்கியமானது யாழ்பபாண இராச்சியத்தின் எல்லாப் பகுதிகளிலும் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு எவ்வித தடைகளும் இல்லாது அனுமதிக்கப்பட வேண்டும் என்பதாகும். தமிழ்ப் பிரதேசங்களில் கத்தோலிக்க மதப் பரம்பலுக்கு மேற்படி உடன்படிக்கை தமிழ் மக்களின் மதமான சைவத்தின் கதவுகளை முழுமையாகத் திறந்துவிட்டது என்றே கொள்ளவேண்டும். மேலும் இப் போர் நடவடிக்கையின்போது போத்துக்கீசப் போர்வீரர்கள் தமது பிரதான உணவாகச் சைவ மக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களைக் கொன்றது சைவர்களை உலுக்கிய சம்பவமாகவும், இதுவரை அறிந்திராத நிகழ்வாகவும் இருந்தது. அத்தோடு சைவக் கோவில்களிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் சூறையாடப்பட்டு, அங்குள்ள ஆவணங்கள், ஏனைய யாவும் தீக்கிரையாக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான சைவக்கோவில்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. மேற்கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக பின்வரும் குறிப்பு மிக முக்கியமான ஆதாரமாக அமைகிறது."

"அரசன் இல்லாத வேளையில்,போர்த்துக்கீசரும் அவர்களின் வாலிபர்களும் , மாலுமிகளும் மக்களின் பொருட்களை அபகரித்தும் , அவர்களின் பசுக்களைக் கொன்று அந்த மாமிசத்தில் புதிய கறிகளை ஆக்கியும் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களின் மனைவிமார்களையும் புதல்விகளையும் மானபங்கப்படுத்தியும் குற்றச் செயல்கள் புரிந்தனர்
( சிவந்த ,உயரமான அழகிய மணப்பெண் ,மாப்பிள்ளை தேடும் இலங்கைத் தமிழர்கள் கவனிக்க. )
என்பதனால் மக்கள் புரட்சி செய்தனர் என மக்கள் ஓலைச்சுவடியில் தமது அரசனுக்கு எழுதினார்கள். இச் செயல்களுக்காக அவர்கள் கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. “

நன்றி "இலங்கையில் தமிழர் "கலாநிதி முருகர் குணசிங்கம் 

தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com