Monday, 28 October 2013

பரிஸ் நகரத்தார் வாழ்க்கை



வணக்கம்

இத் தடவை உங்களுக்கு பணத்துக்காக எதுவும் செய்யும் ஒருவரை அறிமுகம் செய்கின்றோம். இச் சிறுகதையும் உண்மையான ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

சத்தியசீலனுக்கு சுற்றுவட்டாரத்தில் மதிப்பு அதிகம்.

"பாரடா சத்தியை வந்து மூன்டு வருசத்துக்குள்ள பேப்பரும் எடுத்து வேலையும் செய்து ஒரு அப்பாட்மெனும் வாங்கிட்டான்" என்று அங்கலாய்ப்பவர்கள் பலர்.

"அது சரி , ஆனால் வீட்டாரைக் கவனித்தானோ என்டால் அது ஒன்டும் செய்யல்லை. அங்க ஊரில இரண்டு அக்காமார் இருக்கினம். அம்மா தனிய, அப்பா செல் விழுந்து முள்ளியவளையில 2009ல மோசம் போயிட்டார்.” இப்படி சத்தியசீலன்ட இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டுவது மகேந்திரன், சத்தியசீலனின் தூரத்து உறவினன்

".... எங்கேயோ ஒரு பிழை இருக்கும் தானே, எல்லாத்தையும் எல்லாராலயும் சரியாச் செய்யேலாதுதானே”, சத்தியசீலனுக்கு வக்காலத்து வாங்குவது பாலகிருஷ்னன்.

"எண்டாலும் மச்சி, பெண் சகோதரிகளுடைய பிரச்சனைகளை தீர்க்காம, தனக்கு வீடு வாசல் சம்பாரிக்கிறது , மனச்சாட்சி இல்லாத
வேலை. இத்தனைக்கும் அதுகள்ட நகை நட்டுகளை வித்துத்தான் இவர் வெளியில வந்தவர்”, மகேந்திரன் தனது நிலைப்பாட்டை உறுதி செய்தான்.

இவ்வாறான கருத்து வேறுபாடுகளுக்குரிய சத்தியசீலன் வீட்டில இருந்த நகைநட்டுகளையெல்லாம் வித்து ஊருக்கிளையும் கடன் பட்டு வந்தான். அவனது அதிஷ்டம் உடனே அகதி விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எல்லாம் முள்ளியவளையில் குண்டடிக்குப் பலியான அப்பா சிவசுப்பிரமணியத்தின் அருள்.

அப்பாவை இராணுவம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சுட்டுக் கொன்றார்கள், என்னையும் தேடி வர நான் சுவரால் அடுத்த வீட்டுக்குப் பாய்ந்ததில் நெஞ்சில் காயம் என்று விண்ணப்பத்தில் எழுதினான். இதற்காக நெஞ்சில் கத்தியால் தானே தனக்குக் கீறிக் கொண்டான்.

ஆக, அகதி விண்ணப்பம் இலேசாகக் கிடைக்கவில்லை. சத்தியசீலன் அசகாயசூரன்தான்.

பிறகென்ன வேலை கிடைத்ததும், சீலன் மாய்ந்து, மாய்ந்து வேலை செய்து முதலாளி மனம் குளிர்ந்து, ஏற்கனவே அவனிடம் வேலை செய்து கொண்டிருந்த சபாலிங்கத்தை வெளியேற்றிவிட்டு சத்தியசீலனை வேலைக்கு எடுத்துக் கொண்டான். நல்ல விசயம்தான், ஆனால் ஒரேயொரு சோகம் என்னவென்றால் சத்தியசீலை அங்கு வேலைக்குச் சேர்த்தது சபாலிங்கம்தான். இப்படியான குத்துவெட்டுக்கள் இங்கு ஏராளம்.

ஏதோ ஒருவழியில் சத்தியசீலன் கடனோ உடனோ பட்டு ஒரு அபபாட்மென்டும் வாங்கிவிட்டான்.

இந்த சமயம் பார்த்து ஐரோப்பாவுக்கு வந்து மூன்று நான்கு நாடுகளுக்கிடையில் ஓடித்திருந்து விசா கிடைக்காமல் பத்து வருசமாக அலைந்த பத்மநாதனுக்து இறுதியாக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பத்து வருடமாக பிரிந்திருக்கும் மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் கூப்பிடலாம்.

ஆனால் வீடு? அது அடுத்த பிரச்சனை . நான்கு பிள்ளைகளில் இரண்டு குமர்ப் பிள்ளைகளுக்கு வயது பத்தொன்பதும், இருபதும் ஆகிவிட்டது. பதினெட்டுக்குட்பட்ட பிள்ளைகளைத்தான் தந்தை கூப்பிடமுடியும்.

இந்த நேரத்தில் சத்தியசீலனின் ஞாபகம் பத்மநாதனுக்கு வந்தது. பத்மநாதன் நேர்மையானவன். வாடகை வாங்குவதில் ஒரு பிரச்சனையும் இராது என்பதை நன்றாக அறிந்த சத்தியசீலன் பத்மநாதனுக்கு சட்டரீதீயாக உடன்படிக்கை எழுதிக் கொடுத்து, பத்மநாதனின் குடும்பமும் வந்து விட்டது.

ஒரு அறையில் சத்தியசீலனும் அடுத்த இரண்டு அறைகளில் பத்மநாதன் குடும்பமும் இருந்தார்கள். முதல் இரண்டு மூன்று நாட்கள் பத்மநாதனின் மனைவி சத்திசீலன் இரவு வேலையால் களைத்து ரும் போது, பாவம் தனியாக இருப்பவர் என்றிரங்கி" சாப்பிடுங்கோ" என்றாள். சத்தியசீலனும் சந்தோசமாக சாப்பிட்டார்.

நான்காம் ஐந்தாம் நாட்களில் யாரும் அழைக்காமலே சத்தியசீலன் மற்றவர்களுக்கும் வைக்காமல் சாப்பிட்டு விட்டார். பத்மநாதன் குடும்பம் அதிர்ந்துவிட்டது. வாடகையும் கொடுத்து சாப்பாடும் கொடுப்பதா. இதை எப்படித் தடுப்பது, சங்கடமான சமாச்சாரம் அல்லவா ?குழம்பித் தவித்தார்கள். இப்படியான , மானக்கேடான ஒரு
விசயம் ஊரில் நடக்கவே நடக்காது. பட்டினி கிடந்தாலும் ஊர்ச்சனம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

இதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என நினைத்த பத்மநாதன், சத்தியசீலனிடம், குறை நினைக்க வேண்டாம் உங்களுக்கும் சேர்த்துச் சமைக்கவில்லை என்றான்.

அதற்கு சத்தியசீலன்" நான் நீங்கள் சமைத்தால் சாப்பிடுவேன், மற்றும்படி சாப்பாட்டுக்கெண்டு காசு தரமாட்டேன்" என்றான் கூலாக.

பத்மநாதன் குடும்பம் சீலனுக்குப் பயந்து சமைக்காமல், சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன ?

பத்மநாதன் அவசரமாக வீடு தேடுகிறார்!



காசுக்காக எதுவும் செய்யத் தயாரென்றால் சம்பாரிப்பது சிரமமா?
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com