Saturday, 31 August 2013

டொமினிக் ஜீவா, யாழ்ப்பாணத்தின் இலக்கியச்சுடர்


வணக்கம்



இம்முறை உங்களுக்கு யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த எழுத்தாளர் ஒருவரை அறிமுகம் செய்கின்றோம்.
ஓர் நடுத்தர உயர மனிதர், வேட்டி யுடன யாழ் பல்கலைக் கழக தலைவர் திரு. கயிலாசபதியைக் காண ,1975ல் வரும் போதும் திரு .கயிலாசபதி அவர்கள் அந்த மனிதருடன் உயர்ந்த நட்புடன் உரையாடுவதை வியப்புடன் அவதானிப்பவர்கள் அநேகம். அந்த எளிய மனிதர் ஓர் தீவிர எழுத்தாளர். அதென்ன தீவிர எழுத்தாளர் ? டொமினிக் ஜீவா அவர்கள் ஒரு கொப்பி 12 சதம் விற்ற காலத்தில் அதனை வாங்க வழியின்றி தவித்த நேரத்தில் தனி மனிதராக முப்பது வருடங்களாக "மல்லிகை " என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தியவர் . இவர் எத்தகைய தீவிர இலக்கியவாதியாக இருந்திருப்பார் என்பதை அப்போது இலங்கையில் வாழ்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் அவர் தீவிர எழுத்தாளர் என்றோம்.

சவரத் தொழில் புரிந்தவர், தனது சொந்த சிகையலங்கார நிலையத்தை நடத்திக் கொண்டு அதில் வந்த சொற்ப வருமானத்தில் இப் பத்திரிகையை நடத்தியவர். சாதித் துவேசம் கொடிகட்டிப் பறந்த யாழ்ப்பாணதில் ஒரு சவரத் தொழிலாளியின் மகனுக்கு எழுத வாசிக்கத் தெரியுமா , அவன் பள்ளிக் கூடம் போனானா என்று வியந்து மூக்கின் மேல் விரலை வைப்பவர்களுக்கும், அல்லது வாயை ஆவென்று பிளப்பவர்களுக்கும் இத்தால் அறிவிப்பது யாதெனில் இலங்கையில் யாழப்பாணத்தில் சாதித் துவேசம் இருந்த போதிலும் அரசாங்கம் கட்டாயக் கல்வியை சுதந்திர இலங்கையில் அமுல்படுத்தியது.

ஆனால் துரதிஷ்டவசமாக ஆசிரியர்களாக இருந்த பல உயர்சாதிக் கல்விமான்கள் மாணவர்களை சாதி அடிப்படையில் எடைபோட்டு அவமானப்படுத்தினர் . அத்தகைய அவமானத்தை அனுபவித்த திரு டொமினிக் ஜீவா தனது ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை .அதன் பின் தன் தந்தையிடம் குலத் தொழிலைக் கற்கத் தொடங்கினார்.

அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்த கல்கி ,ஆனந்தவிகடன் ,சுதேசமித்திரன், கலைமகள்,அமுதசுரபி ஆகிய வார, மாத இதழ்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இயற்கையா க எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது .சிறுதைகள், கட்டுரைகள் எழுதி உள்ளூர்ப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார் , அப்படியே டொமினிக் ஜீவா எழுத்துலகில் பிரவேசித்தார் .அவரது முதல் சிறுகதை "எழுத்தாளன் "சுதந்திரன் என்ற நாளிதழில் வெளியானது. 1964ல் "மல்லிகை "என்ற மாதாந்த பத்திரிகை ஒன்றை வெளியிடத் தொடங்கினார். இலக்கியப் பத்திரிகையான இவ் வெளியீடு அவரால் அச்சிடப்பட்டு அவரால் வீதி வீதியாகக் கொண்டு செல்லப்பட்டு தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு அச்சிடும் செலவைவிட க் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது .இதில் எப்போதும் இலக்கியத்தரம் வாய்ந்த கட்டுரைகள் ,இலக்கியகர்த்தாக்களின் பேட்டிகள் ,கவிதைகள் , முக்கியமாக "தூண்டில் "என்ற தலைப்பில் கேள்வி பதில்கள் வெளியாகின .முப்பது வருடங்களாக வெளிவந்த மல்லிகை நாட்டின் நிலை மாறியதால் கைவிடப்பட்டு, திரு அந்தனி ஜீவா அவர்கள் கொழும்புக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு மல்லிகைப் பந்தல் என்ற பெயரில் நூல்களை வெளியிட்டார்.

இவர்" சாலையின் திருப்பத்தில்”,” பாதுகை”, "தண்ணீரும் கண்ணீரும்"ஆகிய நூல்களை வெளியிட்டார். இதில் "தண்ணீரும் கண்ணீரும் “1967ல் இலங்கை சாகித்ய அகதமியின் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றக் கொண்டது.1970ல் சாகித்ய மண்டல உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது.அதுமட்டுமன்றி இவரது படைப்புக்கள் ஆங்கில ,இரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தீவிர கம்யூனிஸ்ட் வாதியான திரு அந்தனி ஜீவா அவர்கள் இந்தியாவிலிருந்து அப்போது இறக்குமதி செய்யப்பட்ட மூன்றாம் தர வார, மாதப் பத்திரிகைகளால் இலங்கையின் தரம் வாய்ந்த வெளியீடுகளின் விற்பனை பாதிக்கப்படுவதையிட்டு க் கவலைப்பட்டதுடன், இது பற்றி தமிழகப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில் எல்லாம் துணிந்து கூறியுள்ளார்.

இலங்கையில் இவரது இலக்கிய சேவையைப் பாராட்டி 1987ல் அறுபதாம் வயதில் கொழும்பில் மணிவிழா கொண்டாடப்பட்டது. இச்சமயத்தில் "கருத்துக்கோவை "என்ற தொகுப்பில் திரு ஜீவா அவர்களைப் பற்றி பல இலக்கிய அபிமானிகளின், கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியிடப்பட்டது. இவரை நன்கு அறிந்த இலக்கிய உலகின் சிருஷ்டிகர்தாக்கள் இவரது இலக்கியவெறியை வியந்து பாராட்டினர். இதைவிட "மல்லிகைப் பந்தல்" வெளியீடாக "தூண்டில்", "ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் "என்பனவும் வெளியாகியுள்ளன.

எழுத்தில் வடிக்க முடியாத போராட்டங்களுக்கு மத்தியில் சாதித்துவேசம் பாய்ச்சிய புண்களை சுமந்து கொண்டு விடா முயற்சியுடன் , ஒரு யாகம் நடத்துவது போல் மல்லிகையை வெளியிட்ட திரு அந்தனிஜீவா அவர்கள் இலக்கியத்தாகத்தின் மறுபெயர்!
இவரது படைப்புக்களை எங்கு காண நேரிட்டாலும் கையிலெடுத்து படித்து அந்த படைப்பாளியை கெளரவியுங்கள்.




Monday, 19 August 2013

1983 யூலை

வணக்கம்


முப்பது வருடங்கள் ஓடி மறைந்தாலும் இன்றும் அந்தச் சம்பவம் மனத்திரையில் தோன்றும் போதெல்லாம் ஒரு சில கணங்கள் அப்படியே சிலையாக நின்றுவிடும் என் மனம். இதோ அந்த உண்மைச் சம்பவம் பற்றிய சில வரிகள்.


1980 ஆடி மாதம், ஒரு மாலைப் பொழுது,
காலி வீதி, கொழும்பு , காலியாகிக் கொள்ள
கடைகள்,வீடுகள் ,தமிழர் எனக கருதப்பட்ட
உயிர்கள் தீக்கிரையாகின

காலி வீதி காலியாகும் வேளையில் பல கூட்டங்கள்,
கம்பு, பொல்லு, பெரும் கத்தி, வாள் என
ஆயுதங்களுடன் காடையர் குழுக்கள் வேட்டையாட
இராணுவம் என்றோ, பொலிஸாரென்றோ


ஏதுமில்லை அவ் அவனியில், வழியின்றி அப்
பக்கம் வந்த தமிழெல்லாம் பஸ்மீகரமாக,
அன்று ஆரம்பித்த அமர்க்கள மறிந்த ஆட்சி
யேதும் செய்யாது வாளாதிருக்க,

வந்தது ஒரு மோட்டார் வாகனம், பாய்ந்தது
கூட்டம், கையில் பெற்றோல் சகிதம்,
வாகனத்தைச் சுற்றிய கூட்டம் உள்ளே
கண்டது ஒர் குடும்பம், அப்பா,அம்மா

ஒரு சிறுவன்,ஒரு சிறுமி,மகன்,மகள்
ஒருவன் திறந்தான் பெற்றோல் தகரத்தை ,
வாகனம் பெற்றோலாடியது, மற்றொருவன் தீக்குச்சி
யெடுத்தான், பற்றினான் வீசினான்

பற்றியது நெருப்பு,தீடீரென்று இன்னுமொருவன்
திறந்தான் பின் கதவை ,இழுத்து வெளியில்
விட்டான் பத்து வயது நிரம்பாத அச் சிறுமியை
என்ன நினைத்தானோ தந்தை ,வந்தான் வெளியில்

ஏற்கனவே எரிந்த தலைமயிர் ,மேலுடைஇழுத்தான்
மகளை உள்ளே ,சாத்தினான் கதவை,மூண்டது தீ
கூண்டோடு கயிலாயம் சென்றது குடும்பம், இலங்காபுரி
தீக்கிரையானது அன்றும்; இன்றும்,இனி யென்றுமோ?



இச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சிங்கள மொழியில் எழுதிய கவிதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது!

Monday, 12 August 2013

பூப்பு நீராட்டு விழா?

வணக்கம்



"மகளுக்கு திங்கட்கிழமை தண்ணி வாக்கிறம், வாங்கோ" என்று வீடு வீடாகச் சென்று ஊருக்குள் உற்றார் உறவினர்களுக்குச் சொல்லி பூப்புனித நீராட்டு விழா அடக்கமாக நடந்ததில் தப்பில்லை, அன்று.

"மகளுக்கு சாமத்தியவீடு..........ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடக்கின்றது வாங்கோ "என்று தொலைபேசியில் அழைக்கும்போது,” இப்பவோ பெரியபிள்ளை ஆனவ "என்றால் சீ...அது நடந்து இரண்டு வருசம், அவ ஆள் சின்னனாயிருந்தவடியா கொஞ்சம் வளரட்டும் எண்டு விட்டனாங்கள்.”

அப்ப கன பேருக்கோ சொல்லுறீங்கள்.

ஓம ஓம் ஐந்நூறு கதிரைகள் உள்ள ஹால் எடுத்திருக்கிறம், குடுத்த காசுகளையும் வாங்கத்தானே வேணும் சுவிஸ்ஸிலையிருந்து அண்ணையாக்களும், கனடாவிலையிருந்து அக்கா குடும்பமும் வருவினம்.

அப்ப மகளுக்கு சம்மதமே?

அவவுக்கு விருப்பமில்லைதான் நாங்கள் குடுத்ததுகளை வாங்கிறதில்லையே?

அப்ப பெரிய வெத் (fête, விழா)எண்டு சொல்லுங்கோ.

இந்த சம்பாஷணை பல கேள்விகளை எழுப்புகின்றது. பெண்பிள்ளைகளை முற்றாக அவமானப்படுத்தும் இந்த வைபவத்தை உலகின் எந்த நாகரீக மூலைக்குப் போனாலும் விடாமல் கட்டிக் காக்கும் இந்த வழக்கம் தேவைதானா ?

எப்படி இந்த கலாச்சாரம் தொடங்கியிருக்கலாம் ? அந்தக் காலங்களில் பெண்பிள்ளைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தார்கள். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பெரியவளானதும் ஊருக்க அறிவிக்கவே இந்த எற்பாடு.

தற்போது இப்படி ஒரு தேவை இல்லை. அத்தோடு மேற்கத்திய நாடுகளில் வளரும் பெண்பிள்ளைகளுக்கு இது ஏகப்பட்ட கூச்சத்தைத்தரும் ஒரு நிகழ்ச்சி.இதற்கு செலவழிக்கும் பணமோ எம்மை மிரள வைக்கின்றது . ஐந்நூறு ,ஆயிரம் அழைப்புக்கள் , உற்றார் உறவினர் என்று ஆரம்பித்து நண்பர்கள், ஒரு நாள் கண்டவர்கள், நண்பருக்கு நண்பர்கள் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படியே ஏதோ ஒருவகையில் வாடகைக்கு எடுத்த விழா மண்டபம் நிரம்ப வேண்டு ம் என்பதற்காக கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள்.

அழைக்கப்பட்ட தொகையினருக்கேற்ப சிற்றுண்டி வகைகள், குடிபானங்கள்,உணவு (தரையில் கொட்டிச் சிதறிக்கிடக்கும் உணவுகள் எமது அறியாமையைத்தான் காட்டுகின்றது) அதோடு இணைந்த இதர செலவுகள் ,பெண்ணிற்கான அலங்கார, மூன்று அல்லது நான்கு வகை ஆடை அணிகள், நகைகள் ,கூட வரப்போகும் குட்டித் தோழிகளுக்கான ,(குறைந்தது பத்துச் சிறுமிகள்) ஒரேவகையிலமைந்த ஆடை அணிகள் தவிர்க்க முடியாத வீடியோ புகைப்படப்பிடிப்பு சாதனையாளர்கள் ;மாலை அலங்காரச் செலவு, பாட்டு, நடனக்கூட்டணி, மாலையில் கேக் வெட்டும் இந்து சமய நிகழ்ச்சி, வந்து போகும் விருந்தினரிடம் அம்பதோ ,நூறோ வாங்கிக் கொண்டு கையில் கொடுத்துவிடும் அன்பளிப்புப் பொருள். அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்கு குங்குமம் சந்தனம் தான் மங்கலப் பொருட்கள், இபபோதோ சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ராகன் போன்ற அர்த்தமற்ற பொருட்கள்.மொத்தத்தில் ஒரு மணமகன்இல்லாத குறை,கிட்டத்தட்ட ஒரு திருமணமாகவே நடைபெறுகின்றன இவ்விழாக்கள்.

மறுநாள் கணக்குப் பார்த்தால் செலவு இருபதினாயிரம் யூரோக்கள், வரவு பத்தாயிரமுமில்லை.இந்த நேரத்தில் சாமத்தியவீடு நடத்துவது நட்டம் என்று அங்கலாய்க்கும் ஒரு கூட்டம்.

"நாங்கள் அவையின்ற இரண்டு பெட்டையளுக்கும் போய் அம்பது அம்பதா நூறு குடுத்தனாங்கள் , அவ்வ அம்பது தான் தந்தவை என்பது போன்ற உள்ளூர் சண்டைகள் ஓராயிரம் , தமிழர்களிடையே .”

தமிழினம் தூக்குப்போட்டுச் சாகலாம், அவ்வளவு மானக்கேடான விழாக்கள். ஒரு நாள் முழுக்க பன்னிரண்டு வயதுச் சிறுமி கையில் நிறைநாளியுடன் களைக்க, களைக்க நிற்க வேண்டும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.

இப்படியின்றி தமது கூடப்பிறந்த உறவினர்கள் மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி சிறிய குடும்ப விழாவாக நடத்தும் புத்திசாலிப் பெற்றோர்களுக்கு ஒரு சபாஷ்!

ஒவவொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏதோ ஒரு அழைப்பு போய் குடுத்துவிட்டு வரவேணும் ,இதே பாரிய தொல்லையாப் போச்சு என்று அலுத்துக் கொள்ளுபவர்கள் ஏராளம் நம்மிடையே.

இவையெல்லாவற்றையும் விட பெரிய துயரம், நாம் ஒரு வறிய நாட்டிலிருந்து ஏராளமான இழப்புகளுக்கு மத்தியில் வந்தோம், இன்னும் எம் நாட்டில் வறுமையில் வாடுபவர்கள் ஆயிரம், இப்படிப்பட்ட அட்டகாசங்கள் தேவைதானா ? சமீபத்தில் வவுனியாவில் தாண்டிக்குளத்தில் தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க வழியின்றி ,நவீன நல்லதங்காளாக மாறிய ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் போட, அந்தத் தற்கொலை முயற்சியில் குழந்தைகள் இறந்துவிட, தாய் மட்டும் காப்பாற்றப் பட்ட சம்பவம்,,, யாருக்கும் வெட்கமில்லை …..இதில் யாருக்கும் வெட்கமில்லை...!


Monday, 5 August 2013

சர விளக்கும் திரைச்சீலையும் -விக்கிரமாதித்தன் கதைகள்

வணக்கம்

பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறியது என்ற வசனம் பலருக்கும் தெரியும். இது எங்கிருந்து ஆரம்பித்து என்பதை சிலவேளை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.1960க்கு முன் அம்புலி மாமா ,கண்ணன் என்ற மாத இதழ்கள் தமிழ் நாட்டில் வெளிவந்தன. இவை இலங்கைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட. அம்புலிமாமா இதழில் விக்கிரமாதித்தன் கதைகள் தொடர்ச்சியாக வந். விக்கிரமாதித்தன் கதைகள் கர்ணபரம்ரையாக சொல்லப்பட்டு வந்த வடமொழிக்கதைகள் (சமஸ்கிருத மொழி).இவை பின்னர் வடமொழியில் எழுதப்பட்டன. டமொழியிலிருந்து பல இந்திய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. தமிழ்நாட்டில் பாடநூல்களிலும் இடம்பெற்றன.

இக்கதைகள் நல்மொழிகளைக் கூறுவ. அதாவது நன்னெறிகளை கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துரைக்கும் இக்கதைகள் மந்திரங்கள் , தந்திரங்கள் ,மாயாஜாலங்கள் நிறைந்தவை. ஆனால் அவற்றைவிட மேலாக வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளே அதிகம் அடங்கியுள்ளன. போஜராஜனுக்கு ,விக்கிரமாதித்தனின் ,தனிப்பெரும் நற்குணங்களையும் வீர சாகசங்களையும் பதுமைகள் கூறவதாக அமைந்தவையும் , விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைகளும் உள்ளன.

அநேகமாக எல்லாக் கதைகளிலும் பிரதான கதாபாத்திரம் சகல லட்சணங்களும் பொருந்திய அரசனோ இளனோதான் . பெண்பாத்திரம் பேரழகியாக இருப்பாள் . இக் கதைகளில் கிளிகள்;எறும்புகள், திரைச்சீலை ,சரவிளக்கு எல்லாம் பேசும், பெரும் அறிவாளிகளாக இருப்பார்கள், மைனாக்கள் கதைகள் சொல்லும் ,மரங்கள் ஞானம் போதிக்கும். சிறுவர்களுக்கானது என ஒதுக்கவேண்டாம் . வயதானவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறிவுரைகள் பக்கத்துக்கு பக்கம் கொட்டிக்கிடக்கின்றன. அடிப்படையில் இந்து மதக் கதைகள் .னால் இந்து மதக்கருத்துக்களைப் போதிப்பனவல்ல .எல்லா மதத்தவர்களும்,த்தவர்களும் அறியவேண்டிய ,படிக்கவேண்டிய அரிய பொக்கிஷம்.தியாகத்திற்கு எல்லையே கிடையாது. உயர்ந்த நட்பு எத்தகையானது. தவறானவர்களுடனான நட்பு எத்தகை ஆபத்தைத் தரக் கூடியது, ர்மமானது எவ்வாறு எத்துன்பத்திலிருந்தும் ஒருவரைப் பாதுகாக்கும், மனதிலுள்ளதையே பேசுவதும், பேசியபடியே செய்வதும், செய்ததையே கூறுவதும் நேர்மையான ஒருவருக்குரிய இலட்சணங்களாகும். எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரது தகுதியையும் அவரது உள்ளக்கிடக்கையையும் அவரது செயல்களைக் கொண்டே அறிய முடியும் என்பதுபோன்ற தததுவார்த்த உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

வடமொழியில் ராசு தொகுத்த க்கதைகளை திரு அரு.இராமநாதன் எனும் பிரபல எழுத்தாளர் தொகுத்து வெளியிட்டார் .இதனை நீங்கள் ஒரு கிளிக்கில் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் நாங்களும் தமிழ்கூறும் உலகமும் ஏன் முழு உலகமும் பெற்ற பெரும் பேறு எனத் துணிந்து கூறலாம். ஏனெனில் எல்ளோரும் அறிவாளிகளாக,நல்லவர்களாக திறமையாக வாழ்க்கைப் படகை ஓட்டிச்செல்வார்கள்.ஏதும் சிக்கலில்மாட்டிக் கொள்ளும்போது அதிலிருந்து தப்பும் மார்க்கங்களை உங்களுக்கு கிளியோ மைனாவோ அல்லது அரசனோ உடனடியாக எடுத்துக்கூறுவர்.

பல கதைகள் மிகவும் கருத்தாம் மிக்கவையாகவும் நம்ப முடியாத அளவு சுவாரசியமானவையாகவும் இருப்பதால் ஒரு கதையை மட்டும் தந்து உங்களை கைவிட மனம் ஒப்புக் கொள்வில்லை. பல கதைகளிலும் காணப்படும் ரசிக்கத்தக்க பகுதிகளை இங்கு தந்துள்ளோம் .

"பிறருக்கு உதவி செய்தவர்கள் அது உயர்ந்த செயலாக இருந்தாலும் அதை வாய்விட்டுச் சொல்லமாட்டார்கள் "என்று மன்னர்பிரான் தன் மனதிலே நினைத்துக்கொண்டான்.

"மணிமான் மன்னன் தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் ராஜ்யம் போய்ச் சேர்ந்தான்.தம்பதிகள் இருவரும் சுகமாக வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.ஆனால் ஓர் அறிவாளியும் ஓர் அழகான பெண்ணும் அதிக காலம் மனமொன்றி வாழ முடியுமா?

"பெண்ணே நீ என்னை நேசிக்காவிட்டால் நானும் உன்னைத் தொட விரும்பவில்லை. ஆகவே உன் உள்ளத்தைக் கவர்ந்த காதலன் எவனோ, அவன் யாராக இருந்தாலும் சரி அவனிடம் செல் "என்று சொன்னான். »

"முன் ஜன்மத்தில் எந்தக் காரியங்களைச் செய்து விதை விதைத்தானோ அவற்றின் பலனையே மனிதன் இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறான். இதில் சந்தேகமே இல்லை. முன் ஜன்மத்தில் நடந்ததன் பலனைப் பிரம்மாவாலும் மாற்ற முடியாது".

"ஆம் முன்னொரு காலத்தில் பாரிஜாத விருஷ்ம்,லக்ஷ்மி, சந்திரன் ஆகிய அனைத்தும் கடலிலிருந்துதானே தோன்றின?இன்றைக்கும் சமுத்திரம் நவநிதிக்கும் இருப்பிடமாகத்தான் இருக்கிறது"

"இலட்சியம்,விரதம்,சிரத்தை,தானம் இவற்றில் எதுவாயிருந்தாலும் ஏகமனதாய் ஏகாக்கிர சிந்தையாய்ச் செய்தால்தான் பலிக்கும். ஒருவன் எந்தக் காரியத்தையும் கிரமமாகச் செய்தாலும் அவன் ஏகாக்கிர சித்தத்துடன், நிலை கலங்காத உறுதியுடன் தைரியமாக நடத்தாவிட்டால், எதிலும் சித்தி கிட்டாது. »

"மீன் வயிற்றினுட் சென்ற விக்கிரமாதித்தன் அங்கு மாடமாளிகையும் கூட கோபுரங்களும் அளவற்ற தெருக்களும் கொண்ட ஒரு பட்டணம் இருப்பதைக் கண்டான்."

இந்த நூலை வாசிக்க கீழ்வரும் தொடர்பு எண்ணுடன் தொடர்பு கொள்க.