Monday, 19 August 2013

1983 யூலை

வணக்கம்


முப்பது வருடங்கள் ஓடி மறைந்தாலும் இன்றும் அந்தச் சம்பவம் மனத்திரையில் தோன்றும் போதெல்லாம் ஒரு சில கணங்கள் அப்படியே சிலையாக நின்றுவிடும் என் மனம். இதோ அந்த உண்மைச் சம்பவம் பற்றிய சில வரிகள்.


1980 ஆடி மாதம், ஒரு மாலைப் பொழுது,
காலி வீதி, கொழும்பு , காலியாகிக் கொள்ள
கடைகள்,வீடுகள் ,தமிழர் எனக கருதப்பட்ட
உயிர்கள் தீக்கிரையாகின

காலி வீதி காலியாகும் வேளையில் பல கூட்டங்கள்,
கம்பு, பொல்லு, பெரும் கத்தி, வாள் என
ஆயுதங்களுடன் காடையர் குழுக்கள் வேட்டையாட
இராணுவம் என்றோ, பொலிஸாரென்றோ


ஏதுமில்லை அவ் அவனியில், வழியின்றி அப்
பக்கம் வந்த தமிழெல்லாம் பஸ்மீகரமாக,
அன்று ஆரம்பித்த அமர்க்கள மறிந்த ஆட்சி
யேதும் செய்யாது வாளாதிருக்க,

வந்தது ஒரு மோட்டார் வாகனம், பாய்ந்தது
கூட்டம், கையில் பெற்றோல் சகிதம்,
வாகனத்தைச் சுற்றிய கூட்டம் உள்ளே
கண்டது ஒர் குடும்பம், அப்பா,அம்மா

ஒரு சிறுவன்,ஒரு சிறுமி,மகன்,மகள்
ஒருவன் திறந்தான் பெற்றோல் தகரத்தை ,
வாகனம் பெற்றோலாடியது, மற்றொருவன் தீக்குச்சி
யெடுத்தான், பற்றினான் வீசினான்

பற்றியது நெருப்பு,தீடீரென்று இன்னுமொருவன்
திறந்தான் பின் கதவை ,இழுத்து வெளியில்
விட்டான் பத்து வயது நிரம்பாத அச் சிறுமியை
என்ன நினைத்தானோ தந்தை ,வந்தான் வெளியில்

ஏற்கனவே எரிந்த தலைமயிர் ,மேலுடைஇழுத்தான்
மகளை உள்ளே ,சாத்தினான் கதவை,மூண்டது தீ
கூண்டோடு கயிலாயம் சென்றது குடும்பம், இலங்காபுரி
தீக்கிரையானது அன்றும்; இன்றும்,இனி யென்றுமோ?



இச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சிங்கள மொழியில் எழுதிய கவிதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது!