Monday, 12 August 2013

பூப்பு நீராட்டு விழா?

வணக்கம்



"மகளுக்கு திங்கட்கிழமை தண்ணி வாக்கிறம், வாங்கோ" என்று வீடு வீடாகச் சென்று ஊருக்குள் உற்றார் உறவினர்களுக்குச் சொல்லி பூப்புனித நீராட்டு விழா அடக்கமாக நடந்ததில் தப்பில்லை, அன்று.

"மகளுக்கு சாமத்தியவீடு..........ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடக்கின்றது வாங்கோ "என்று தொலைபேசியில் அழைக்கும்போது,” இப்பவோ பெரியபிள்ளை ஆனவ "என்றால் சீ...அது நடந்து இரண்டு வருசம், அவ ஆள் சின்னனாயிருந்தவடியா கொஞ்சம் வளரட்டும் எண்டு விட்டனாங்கள்.”

அப்ப கன பேருக்கோ சொல்லுறீங்கள்.

ஓம ஓம் ஐந்நூறு கதிரைகள் உள்ள ஹால் எடுத்திருக்கிறம், குடுத்த காசுகளையும் வாங்கத்தானே வேணும் சுவிஸ்ஸிலையிருந்து அண்ணையாக்களும், கனடாவிலையிருந்து அக்கா குடும்பமும் வருவினம்.

அப்ப மகளுக்கு சம்மதமே?

அவவுக்கு விருப்பமில்லைதான் நாங்கள் குடுத்ததுகளை வாங்கிறதில்லையே?

அப்ப பெரிய வெத் (fête, விழா)எண்டு சொல்லுங்கோ.

இந்த சம்பாஷணை பல கேள்விகளை எழுப்புகின்றது. பெண்பிள்ளைகளை முற்றாக அவமானப்படுத்தும் இந்த வைபவத்தை உலகின் எந்த நாகரீக மூலைக்குப் போனாலும் விடாமல் கட்டிக் காக்கும் இந்த வழக்கம் தேவைதானா ?

எப்படி இந்த கலாச்சாரம் தொடங்கியிருக்கலாம் ? அந்தக் காலங்களில் பெண்பிள்ளைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தார்கள். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பெரியவளானதும் ஊருக்க அறிவிக்கவே இந்த எற்பாடு.

தற்போது இப்படி ஒரு தேவை இல்லை. அத்தோடு மேற்கத்திய நாடுகளில் வளரும் பெண்பிள்ளைகளுக்கு இது ஏகப்பட்ட கூச்சத்தைத்தரும் ஒரு நிகழ்ச்சி.இதற்கு செலவழிக்கும் பணமோ எம்மை மிரள வைக்கின்றது . ஐந்நூறு ,ஆயிரம் அழைப்புக்கள் , உற்றார் உறவினர் என்று ஆரம்பித்து நண்பர்கள், ஒரு நாள் கண்டவர்கள், நண்பருக்கு நண்பர்கள் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படியே ஏதோ ஒருவகையில் வாடகைக்கு எடுத்த விழா மண்டபம் நிரம்ப வேண்டு ம் என்பதற்காக கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள்.

அழைக்கப்பட்ட தொகையினருக்கேற்ப சிற்றுண்டி வகைகள், குடிபானங்கள்,உணவு (தரையில் கொட்டிச் சிதறிக்கிடக்கும் உணவுகள் எமது அறியாமையைத்தான் காட்டுகின்றது) அதோடு இணைந்த இதர செலவுகள் ,பெண்ணிற்கான அலங்கார, மூன்று அல்லது நான்கு வகை ஆடை அணிகள், நகைகள் ,கூட வரப்போகும் குட்டித் தோழிகளுக்கான ,(குறைந்தது பத்துச் சிறுமிகள்) ஒரேவகையிலமைந்த ஆடை அணிகள் தவிர்க்க முடியாத வீடியோ புகைப்படப்பிடிப்பு சாதனையாளர்கள் ;மாலை அலங்காரச் செலவு, பாட்டு, நடனக்கூட்டணி, மாலையில் கேக் வெட்டும் இந்து சமய நிகழ்ச்சி, வந்து போகும் விருந்தினரிடம் அம்பதோ ,நூறோ வாங்கிக் கொண்டு கையில் கொடுத்துவிடும் அன்பளிப்புப் பொருள். அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்கு குங்குமம் சந்தனம் தான் மங்கலப் பொருட்கள், இபபோதோ சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ராகன் போன்ற அர்த்தமற்ற பொருட்கள்.மொத்தத்தில் ஒரு மணமகன்இல்லாத குறை,கிட்டத்தட்ட ஒரு திருமணமாகவே நடைபெறுகின்றன இவ்விழாக்கள்.

மறுநாள் கணக்குப் பார்த்தால் செலவு இருபதினாயிரம் யூரோக்கள், வரவு பத்தாயிரமுமில்லை.இந்த நேரத்தில் சாமத்தியவீடு நடத்துவது நட்டம் என்று அங்கலாய்க்கும் ஒரு கூட்டம்.

"நாங்கள் அவையின்ற இரண்டு பெட்டையளுக்கும் போய் அம்பது அம்பதா நூறு குடுத்தனாங்கள் , அவ்வ அம்பது தான் தந்தவை என்பது போன்ற உள்ளூர் சண்டைகள் ஓராயிரம் , தமிழர்களிடையே .”

தமிழினம் தூக்குப்போட்டுச் சாகலாம், அவ்வளவு மானக்கேடான விழாக்கள். ஒரு நாள் முழுக்க பன்னிரண்டு வயதுச் சிறுமி கையில் நிறைநாளியுடன் களைக்க, களைக்க நிற்க வேண்டும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.

இப்படியின்றி தமது கூடப்பிறந்த உறவினர்கள் மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி சிறிய குடும்ப விழாவாக நடத்தும் புத்திசாலிப் பெற்றோர்களுக்கு ஒரு சபாஷ்!

ஒவவொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏதோ ஒரு அழைப்பு போய் குடுத்துவிட்டு வரவேணும் ,இதே பாரிய தொல்லையாப் போச்சு என்று அலுத்துக் கொள்ளுபவர்கள் ஏராளம் நம்மிடையே.

இவையெல்லாவற்றையும் விட பெரிய துயரம், நாம் ஒரு வறிய நாட்டிலிருந்து ஏராளமான இழப்புகளுக்கு மத்தியில் வந்தோம், இன்னும் எம் நாட்டில் வறுமையில் வாடுபவர்கள் ஆயிரம், இப்படிப்பட்ட அட்டகாசங்கள் தேவைதானா ? சமீபத்தில் வவுனியாவில் தாண்டிக்குளத்தில் தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க வழியின்றி ,நவீன நல்லதங்காளாக மாறிய ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் போட, அந்தத் தற்கொலை முயற்சியில் குழந்தைகள் இறந்துவிட, தாய் மட்டும் காப்பாற்றப் பட்ட சம்பவம்,,, யாருக்கும் வெட்கமில்லை …..இதில் யாருக்கும் வெட்கமில்லை...!