Saturday, 31 August 2013

டொமினிக் ஜீவா, யாழ்ப்பாணத்தின் இலக்கியச்சுடர்


வணக்கம்



இம்முறை உங்களுக்கு யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த எழுத்தாளர் ஒருவரை அறிமுகம் செய்கின்றோம்.
ஓர் நடுத்தர உயர மனிதர், வேட்டி யுடன யாழ் பல்கலைக் கழக தலைவர் திரு. கயிலாசபதியைக் காண ,1975ல் வரும் போதும் திரு .கயிலாசபதி அவர்கள் அந்த மனிதருடன் உயர்ந்த நட்புடன் உரையாடுவதை வியப்புடன் அவதானிப்பவர்கள் அநேகம். அந்த எளிய மனிதர் ஓர் தீவிர எழுத்தாளர். அதென்ன தீவிர எழுத்தாளர் ? டொமினிக் ஜீவா அவர்கள் ஒரு கொப்பி 12 சதம் விற்ற காலத்தில் அதனை வாங்க வழியின்றி தவித்த நேரத்தில் தனி மனிதராக முப்பது வருடங்களாக "மல்லிகை " என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தியவர் . இவர் எத்தகைய தீவிர இலக்கியவாதியாக இருந்திருப்பார் என்பதை அப்போது இலங்கையில் வாழ்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் அவர் தீவிர எழுத்தாளர் என்றோம்.

சவரத் தொழில் புரிந்தவர், தனது சொந்த சிகையலங்கார நிலையத்தை நடத்திக் கொண்டு அதில் வந்த சொற்ப வருமானத்தில் இப் பத்திரிகையை நடத்தியவர். சாதித் துவேசம் கொடிகட்டிப் பறந்த யாழ்ப்பாணதில் ஒரு சவரத் தொழிலாளியின் மகனுக்கு எழுத வாசிக்கத் தெரியுமா , அவன் பள்ளிக் கூடம் போனானா என்று வியந்து மூக்கின் மேல் விரலை வைப்பவர்களுக்கும், அல்லது வாயை ஆவென்று பிளப்பவர்களுக்கும் இத்தால் அறிவிப்பது யாதெனில் இலங்கையில் யாழப்பாணத்தில் சாதித் துவேசம் இருந்த போதிலும் அரசாங்கம் கட்டாயக் கல்வியை சுதந்திர இலங்கையில் அமுல்படுத்தியது.

ஆனால் துரதிஷ்டவசமாக ஆசிரியர்களாக இருந்த பல உயர்சாதிக் கல்விமான்கள் மாணவர்களை சாதி அடிப்படையில் எடைபோட்டு அவமானப்படுத்தினர் . அத்தகைய அவமானத்தை அனுபவித்த திரு டொமினிக் ஜீவா தனது ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை .அதன் பின் தன் தந்தையிடம் குலத் தொழிலைக் கற்கத் தொடங்கினார்.

அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்த கல்கி ,ஆனந்தவிகடன் ,சுதேசமித்திரன், கலைமகள்,அமுதசுரபி ஆகிய வார, மாத இதழ்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இயற்கையா க எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது .சிறுதைகள், கட்டுரைகள் எழுதி உள்ளூர்ப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார் , அப்படியே டொமினிக் ஜீவா எழுத்துலகில் பிரவேசித்தார் .அவரது முதல் சிறுகதை "எழுத்தாளன் "சுதந்திரன் என்ற நாளிதழில் வெளியானது. 1964ல் "மல்லிகை "என்ற மாதாந்த பத்திரிகை ஒன்றை வெளியிடத் தொடங்கினார். இலக்கியப் பத்திரிகையான இவ் வெளியீடு அவரால் அச்சிடப்பட்டு அவரால் வீதி வீதியாகக் கொண்டு செல்லப்பட்டு தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு அச்சிடும் செலவைவிட க் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது .இதில் எப்போதும் இலக்கியத்தரம் வாய்ந்த கட்டுரைகள் ,இலக்கியகர்த்தாக்களின் பேட்டிகள் ,கவிதைகள் , முக்கியமாக "தூண்டில் "என்ற தலைப்பில் கேள்வி பதில்கள் வெளியாகின .முப்பது வருடங்களாக வெளிவந்த மல்லிகை நாட்டின் நிலை மாறியதால் கைவிடப்பட்டு, திரு அந்தனி ஜீவா அவர்கள் கொழும்புக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு மல்லிகைப் பந்தல் என்ற பெயரில் நூல்களை வெளியிட்டார்.

இவர்" சாலையின் திருப்பத்தில்”,” பாதுகை”, "தண்ணீரும் கண்ணீரும்"ஆகிய நூல்களை வெளியிட்டார். இதில் "தண்ணீரும் கண்ணீரும் “1967ல் இலங்கை சாகித்ய அகதமியின் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றக் கொண்டது.1970ல் சாகித்ய மண்டல உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது.அதுமட்டுமன்றி இவரது படைப்புக்கள் ஆங்கில ,இரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தீவிர கம்யூனிஸ்ட் வாதியான திரு அந்தனி ஜீவா அவர்கள் இந்தியாவிலிருந்து அப்போது இறக்குமதி செய்யப்பட்ட மூன்றாம் தர வார, மாதப் பத்திரிகைகளால் இலங்கையின் தரம் வாய்ந்த வெளியீடுகளின் விற்பனை பாதிக்கப்படுவதையிட்டு க் கவலைப்பட்டதுடன், இது பற்றி தமிழகப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில் எல்லாம் துணிந்து கூறியுள்ளார்.

இலங்கையில் இவரது இலக்கிய சேவையைப் பாராட்டி 1987ல் அறுபதாம் வயதில் கொழும்பில் மணிவிழா கொண்டாடப்பட்டது. இச்சமயத்தில் "கருத்துக்கோவை "என்ற தொகுப்பில் திரு ஜீவா அவர்களைப் பற்றி பல இலக்கிய அபிமானிகளின், கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியிடப்பட்டது. இவரை நன்கு அறிந்த இலக்கிய உலகின் சிருஷ்டிகர்தாக்கள் இவரது இலக்கியவெறியை வியந்து பாராட்டினர். இதைவிட "மல்லிகைப் பந்தல்" வெளியீடாக "தூண்டில்", "ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் "என்பனவும் வெளியாகியுள்ளன.

எழுத்தில் வடிக்க முடியாத போராட்டங்களுக்கு மத்தியில் சாதித்துவேசம் பாய்ச்சிய புண்களை சுமந்து கொண்டு விடா முயற்சியுடன் , ஒரு யாகம் நடத்துவது போல் மல்லிகையை வெளியிட்ட திரு அந்தனிஜீவா அவர்கள் இலக்கியத்தாகத்தின் மறுபெயர்!
இவரது படைப்புக்களை எங்கு காண நேரிட்டாலும் கையிலெடுத்து படித்து அந்த படைப்பாளியை கெளரவியுங்கள்.