இம்முறை எமது வலைப்பூ வாசகர்களுக்கு மிகவும் சிறந்த ஒர் மலையாள திரைப்படத்தை அறிமுகம் செய்கின்றோம். தற்போது அதிகமாக பேசப்படும் திருநங்கைகளைப் பற்றி எடுக்கப்பட்ட அதி அற்புதமான இத் திரைச்சித்திரம் நிச்சயம் உங்களைச் சிந்திக்கவைக்கும்!
அர்த்தநாரி என்கின்ற வார்த்தைக்கு பல தென்னிந்திய மொழிகளில் ஒரே அர்த்தம் தான். ஆணும் பெண்ணும் சரிசமமாக இணைந்த உருவத்திற்கே இந்தப் பெயர். இந்து மதத்தில் அர்த்தநாரீஸ்வரர் என்ற ஒர் அவதாரம் சிவன் எடுத்துள்ளார். ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் உள்ளவாறு சித்திரங்கள் வரையப்பட்டும் காவியங்கள்,
சிற்பங்கள் செதுக்கப்பட்டும் உள்ளதை இந்துக் கோயில்களில் காணலாம்.
உண்மையில் இத்தகைய மனிதர்கள் உலகில் இல்லை, ஆனால் எவ்வாறு இத்தகையதொரு கற்பனை உருவானது என்பது கேள்விக்குறி!
உருவத்தில் ஆணாக இருந்தாலும் சிந்தனையும் செயலும் பெண்ணாக அல்லது இரண்டுமாக வாழ்பவர்கள் பலர் உலகில் உள்ளனர்.
இந்த இயற்கையின் விசித்திரப் படைப்பை உள்ளவாறு ஏற்று அத்தகையவர்களை சராசரிப் பிரஜைகளாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா , இலங்கை போன்ற தென் கிழக்காசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் இவர்களை கேலிப் பொருளாக நடத்துகின்றன.
இந்திய திரைப்படங்கள் இவர்களை மதிப்புக்குரிய கதாபாத்திரங்களாகப் படைப்பதில்லை.
மலையாளத் திரைப்பட உலகம் இதற்கு விதிவிலக்கானது. 1980, 1990களில் ஏகப்பட்ட பரீட்சார்த்தப் படங்களைத் தயாரித்த இவர்கள் அற்புதமான ஒரு திரைப்படமான "அர்த்தநாரி"யைத் தயாரித்தார்கள். சர்வதேச திரைப்படத் தரத்தில் இயக்கப்பட்ட இத் திரைப்படத்தின் கதையானது
ஆண் உருவத்தில் பெண்ணின் குணாதிசயங்களும் நளினமும் கொண்ட ஒர் மனிதர் எவ்வாறு இவ்வுலகினரால் துன்புறுத்தப்படுகின்றார், கேலி செய்யப்படுகின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
தனது உடன்பிறப்பால், பள்ளித் தோழர், தோழிகளால், கிராமத்தவர்களால் இம்சைப்படுத்தப்பட்டு கிராமத்தை விட்டே ஒடி … வாழ்க்கைப் பாதையில் பல தடவை தடம் புரண்டு கண்ணீர் விடுவதும் எரிமலையாய் குமுறுவதும் கொலைகாரராவதும்.... அப்பப்பா எத்தனை துன்பங்கள்.
எல்லாவற்றையும் விட அவர் சில சமயங்களில் ஆணின் மன நிலையில் செயற்படுவதும், சில வேளைகளில் பெண்ணாக உணர்வதும் , செயற்படுவதும் , அதனால் ஒருபோதும் அமைதியான, இன்பமான வாழ்க்கை வாழமுடியாத நிலையும்.....
"அர்த்தநாரி" என்ற இத் திரைப்படம் மலையாள மொழியானாலும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இரசிக்கக் கூடியதாகவும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரைப்பட உலகின் நடிகர் திலகங்களான மனோஜ் கே.விஜயன், திலகன் ,நடிகை சுகுமாரி,இன்னசன்ட்
போன்றவர்களின் அதி அற்புத நடிப்பால் உருவான இச் சித்திரமும் , இது கூறும் உண்மைகளும் , நம்மால் , இச் சமூகம் படும் துன்பங்களை எடுத்துக் காட்டி, எம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றன.
எமது வலைப்பூ வாசகர்கள் பார்க்கவும், சிந்திக்கவும் இதோ அர்த்தநாரி!