Saturday, 27 July 2013

பாண்டியன், சுந்தரம், பாலன்.. (.தேயிலைத் தோட்டங்களின் சீர்கேடு)..

வணக்கம்



சிறுவர், சிறுமிகள் உணவு விடுதிகளில், வீடுகளில் கடைகளில் வேலை செய்வது இலங்கையின் எந்தப் பகுதியிலும் காணக்கூடிய ஒன்று .இவர்கள் யார் என்று நாம் ஒரு போதும் சிந்திப்பதில்லை. உணவு விடுதிகளில் காசாளருக்கருகில், நிலத்தில் மறைவாக அமர்ந்த வண்ணம் சிறிய பொலித்தின் பைகளில் குழம்பு, சொதி பொட்டலம் செய்யும் இவர்களைப் பலரும் காண முடியாது.அழுக்கான ஆடைகளுடன் உணவு விடுதிகளில் வேலை செய்யும் இவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் இரண்டு வேளை சாப்பாடும் படுக்க ஓர் இடமும் தான். கடந்த ஏழு மாதங்களாக மலைப் பிரதேசங்கலில் பெய்யும் மழை, மண் சரிவு சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மலையக மக்களும் அவர்களின் பிள்ளைகளும் வாழும் வகை தேடி கொழும்பை நோக்கி வருகின்றனர். அங்கு அரைவயிற்றைக் கழுவுவதற்கு மட்டுமே போதுமாக உள்ளது அவர்கள் பெறும் ஊதியம்.

நாம் வாழும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கும் வழக்கம் இலங்கையில் இல்லை. அத்தோடுசிறுவர் சிறுமிகளை வேலைக்கு வைத்த குற்றத்துக்காக எவரும் தண்டிக்கபடுவதுமில்லை. மேலும் மலைப் பிரதேசங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பனவில ,கல்பீலி தோட்டங்கள் இவ் வருடம் ஜூன் 7ந் திகதி தீப்பற்றி எரிந்ததன. கடந்த ஆறு வருடங்களுக்கு முன் படுல்கல தனியார் தொழிற்சாலை தீப்பற்றி நாசமாகி பின் திருத்தப்பட்டு இயங்குகின்றது. ஒரு வருடத்துக்கு முன் அல்கொல தொழிற்சாலை எரிந்தது. இயங்கும் சில தொழிற்சாலைகள் 24மணிநேரமும் இயங்குவதால் விரைவில் இவை பழுதடையும் ஆபத்து உள்ளது. மின்சார ஒழுக்கு காரணமாகவே இத் தொழிற்சாலைகள் தீப்பற்றி எரிந்துள்ளன.அதுமட்டுமல்ல பல தேயிலைத் தொழிற்சாலைகள் மிகப் பழமையானவை. இவற்றைத் திருத்தவதில் முதலாளிகளுக்கோ அரசாங்க உத்தியோகத்தர்களுக்கோ, அல்லது அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. (இவற்றில் சில அரசாங்கத்துக்குரியவை. மற்றவை தனிப்பட்ட நபர்களுக்குரியவை.)

மேற்கூறிய காரணங்களால் வேலை இல்லை அல்லது வருமானக் குறைவு!. எனவே மலைப்பிரதேச இலங்கைத் தமிழ் மக்கள் ,வாழும் வழிவகை தேடி நகரங்களுக்கு வருகின்றனர்மீண்டும் சுரண்டப்படுகின்றனர்.

இன்னும் முக்கிய நகரங்களில் வேலை தேடித் திரியும் இச் சிறார்கள் எத்தகை துன்பங்களை சந்திக்க நேரிடும் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும்இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் நல்ல திக்கை நோக்கித் திரும்ப வேண்டும் என்று விரும்பும் அனைத்துலக மக்களும் மலையகத்தில் வாழ்பவர்கள் கண்ணீரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் மலைப்பிரதேசங்களைப் போல் அழகான இடங்களை வேறு எங்கும் காணமுடியாதுபிரஞ்சு மொழியில் pittoresque ஆங்கிலத்தில் picturesque தமிழில் படம் அல்லது ஓவியம் போல்!  மலைப்பிரதேசங்களின் அழகைஒரு கை தேர்ந்த ஓவியனால் கூட  வரைய முடியுமா என்பது சந்தேகம்ஆனால்அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைதான் எவ்வளவு துயரமானது !

மனம் ஆற ஒரு கீதம்.


Rythme (French) Natham (Tamil) Rhythm (English) எந்த மொழியில் கூறினாலும் அத்தனையும் அமைந்த குரலுக்குரியவர் காலம் சென்ற திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்திரு சுப்பிரமணிய பாரதியாரின்" மோகத்தை கொன்றுவிடு" என்ற தேவகானம் உங்களுக்கு இன்று சமர்ப்பணம்.சிந்தை தெளிவாக்கு அல்லால் இதைச் செத்தவுடலாக்கு!

Monday, 22 July 2013

கீழ்க் கரவையில் ," நலந்தானா"

வணக்கம்

1975 வரை இலங்கையில் கோயில்களில் இசைக் கச்சேரிகள், சின்னமேளம் என்றழைக்கப்பட்டவர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், இலக்கிய சமயப் பேச்சாளர்களின் பிரசங்கங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. யாருடைய திருவிழாவுக்கு பிரபலங்கள் வருகின்றார்கள் என்பதில் பெரும் போட்டியே இருக்கும்.

இரவு 11 மணியளவில் தான் நாட்டியப் பெண்மணிகள் வருவார்கள். உள்ளூர் பெண்களும் பலர் இத் தொழிலில் இருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் சின்ன மேளங்கள் வருவதாகப் பேசிக் கொண்டார்கள் .ரேடியோவில் பாட்டுப் போட்டாலொழிய மற்றும்படி பாட்டுக் கேட்க முடியாத காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு . இரவு, இருட்டில் நாட்டியப் பெண்கள் பளபளப்பான உடைகள், பூமாலை, பவுடர் பூச்சு,நகையலங்காரங்களுடன் வரும் போது எல்லா முகங்களும் அவர்களையே நோக்கும், ஏதோ சொர்க்கத்திலிருந்து தேவதைகள் வருவது போல் !

இதைவிட நாதஸ்வர, தவில் கச்சேரிகளும் பிரபலமாக இருந்தன. இச் சமயத்தில் 1960 அளவில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளியானது. இது திரு. கொத்தமங்கலம் சுப்பு என்ற மிகப் புகழ் பெற்ற எழுத்தாளரால் ஆனந்தவிகடன் வார இதழில் கலைமணி என்ற புனை பெயரில் தொடர் கதையாக வந்து புகழ் பெற்ற நாவல். இக் கதை ஒரு நாட்டியப் பெண்ணுக்கும் நாதஸ்வர இசைக் களைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட காதலைப் பற்றியது!

இப் படத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராக திரு சிவாஜிஅவர்களும் திரு ஏ வி எம் இராஜன் அவர்களும் நடித்த போது அவ்விருவருக்கும் பின்னனியாக நாதஸ்வரம் வாசிப்பதற்கு , அப்போது பிரபலமாக இருந்த மதுரை திரு பி. என் சேதுராமன்,பொன்னுசாமி சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் இசை அமைத்த இத் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது.

சந்து பொந்தெல்லாம் எந்நேரமும்" நலந்தானா நலந்தானா" பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது வரும் பிரபல படங்களின் பாட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு பாட்டுப் புத்தகங்கள் விற்கப்பட்டன.கதை வசனமும் தனியாக அச்சிடபபட்டு விற்கப்பட்டது.

கரவெட்டி கிழக்கு யார்க்கரு விநாயகர் ஆலயம்



1963ம் ஆண்டு யாழ். கரவை யார்க்கரு விநாயகர் திருவிழா வந்த போது ஏழாம் திருவிழா உபயகாரர்களுக்கு பிரபல நாதஸ்வர வித்துவான்கள் திரு சேதுராமன் ,பொன்னுசாமி அவர்களை கரவெட்டி கிழக்குக்கு அழைத்து வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இக்காலங்களில் இந்தியக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வர மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களால் மட்டுமே முடியும். அவ்வாறு உயர் பதவிகளில் ,கீழ்க்கரவையைச் சேர்ந்த பலரும் இருந்ததால் இந் நாதஸ்வரக் கச்சேரி சாத்தியமாயிற்று.

படத்தில் காணப்படும் கீழ் கரவை யார்க்கரு விநாயகர் கோயில் வரலாறு காணாத பெருங் கூட்டம் கண்டது. திரு பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்களை , வரவேற்கவும், அவர்களது இசையை இரசிக்கவும் யாழ் மாவட்டமே யார்க்கருவில் கூடியது.இரவு எட்டு மணியிலிருந்தே "இதோ வந்துவிட்டார்கள்,நாதஸ்வர வித்துவான்கள்,தில்லானா மோகனாம்பாள் புகழ் சேதுராமன் பொன்னுசாமி அவர்கள்"என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு முறையும் தலையை நிமிர்த்திப் பார்ப்பதும் ஏமாறுவதுமாக இருந்தனர் மக்கள்.

எப்பொழுதும் போல் இரவு 11 மணியளவில் இரு நாதஸ்வரக் கலைஞர்களும் வந்தனர். உபயகாரரால் இவர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். மிகவும் அழகான தோற்றமுடைய இவர்களில் திரு. சேதுராமன் அவர்கள் உயரமானவராகவும் அவரது இளவல் சற்று உயரம் குறைந்தவராகவும் இருந்தார்.

இவர்கள் வந்த உடனேயே "நலந்தானா" பாடல் இசைக்கப்படும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாக இருந்தது. ஆனால் பலருக்கும் புரியாத இராகங்கள் இசைக்கப்பட்டன. இரசிகர்கள் கூட்டம் ஆர்வம் இழந்து சோர்ந்து போகும் போதெல்லாம் "நலந்தானா "பாடல் இராகம் இசைக்கப்பட்டது.மக்கள் கூட்டம் உற்சாகமாக தலையை நிமிர்த்தியதும் உடனே ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த, அனேகருக்குப் புரியாத இராக ஆலாபனை தொடரப்பட்டது..

இப்படியாக நடந்த இசைவிழா அதிகாலை நான்கு மணியளவில் உண்மையாகவே "நலந்தானா" பாடல் இசைக்கப்பட்டு, நாதஸ்வரக் கலைஞர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவேறியது.

விடிந்ததும் பார்த்தால் யார்க்கரு விநாயகர் கோயில் சுற்று வட்டாரம் முழுவதும் ஏகப்பட்ட மோட்டார் கார்களும், துவிச்சக்கர வண்டிகளும் குப்பை கூழங்களுமாகயிருந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்காததால், குடிபானப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இரவு முழுவதும் அயல் கிராமங்களான மந்திகை,நெல்லியடி, பகுதிகளில் மூடியிருந்த கடைகளை திறக்கச் செய்து யானை மார்க் சோடாப்புட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டன.

யார்க்கரு கோயிலுக்கு முன் ஒர் அரச மரம் உள்ளது. இதன் கிளைகளில் நூற்றுக்கணக்கான இரசிகர்கள் இரவு ஏறி அமர கொப்பொன்று முறிய,விழுந்தவர்கள் காயம் ஏதுமின்றித் தப்பினார்கள்!

1963ல் தமிழ் திரைப்பட உலகப்,புகழ் பெற்ற மதுரை சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட திரு சேதுராமன் ,பொன்னுசாமி அவர்களை அழைத்து , அவர்களது இன்னிசையை யாழ். மாவட்ட தமிழ் மக்களுக்கு சமர்ப்பித்த பெருமிதத்தில் கீழ்க் கரவை பகலில் நிம்மதியாக உறங்கியது!


தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com




Wednesday, 17 July 2013

காதலா ? காதலேதான் ! ( இசையும் கதையும்)

வணக்கம்


காதலித்த குற்றத்துக்காக தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மிகுந்த துயரத்துடன் நினைவு கூருகின்றோம்.

இருவர் காதலித்தால் அது அந்தக் கிராமத்தின் பிரச்சனை, மாவட்டத்தின் பிரச்சனை, மாநிலத்தின் பிரச்சனை , பின்னர் அரசியல் கட்சிகளின் பிரச்சனை இறுதியில் தேசியப் பிரச்சனை!  இனியென்ன, திரைப்படம் எடுப்பார்கள், சிலர் பல கோடிகளை கேடிக்கொள்வார்கள் இந்த(இந்திய) நாடு எப்போது திருந்தப் போகின்றது? 

இந்தச் சிறுகதை உங்கள் சிந்தனைக்கு!

என் பெயர் பாஞ்சாலி, 1986ல் இலங்கையை விட்டு என் மூன்று வயது மகன் ஜனகனையும் கூட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு வெளிக்கிடும்போது எதிர்காலத்தைப் பற்றி பெரிதாக ஏதும் திட்டங்கள் இல்லை. அதுமட்டுமல்ல எங்கே போகப் போகின்றேன் என்று நிச்சயமாகத் தெரியாது. நான் நினைக்கும் நாட்டுக்குப் போய்ச் சேருவேனோ என்பதும் தெரியாது. தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறிய காலம் அது. செய்த நல்ல உத்தியோகத்தையும் விட்டு விட்டு,கண்ணை மூடிக்கொண்டு காட்டுக்குப் புறப்பட்டதுபோல்.

எனது பெயர் என்னை எப்போதும் பயமுறுத்தியது, ஒரு துரதிஷ்டமான பெயர். ஐவருக்கு மனைவி,( மகா பாரதத்தில்) துச்சாதனனால் சபையில் துகிலுரியப்பட்டாள், என்ன பாடு பட்டிருப்பாள் ஒரு பெண் !

இருந்தாலும் கால நிர்ப்பந்தத்தின்படி வெளியேறினேன். அப்போது கிழக்கு பெர்லினுக்கு விசா தேவையில்லை . அங்கு வந்ததும் மேற்கு பெர்லினுக்கு இரயில் றுவது என்பது திட்டம் . நான் வரும்போது என்னுடன் இருபது இளைஞர்கள் வந்தனர், நான் மட்டும்தான் கையில் குழந்தையுடன். மாலை மங்குகின்றது, குழந்தைக்கு சாப்பாடு எதுவும் கையில் இல்லை , இப்போது நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது , குழந்தையும் பசித்து அழவில்லை.

நல்லவேளை, இரண்டாவது இரயில் நிலையத்திலேயே மேற்கு பெர்லின் பொலிசார் இரயிலில் உள்ளட்டனர், எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்று ஒரு ஜீப்பில் ஏற்றினார்கள், ஆங்கிலம் தெரிந்ததால் எம்மை அகதி முகாமுக்கு அழைத்துச் செல்கின்றார்கள் எனத் தெரிந்து கொண்டேன். பொலிஸ் நிலையத்தில் தந்த தேநீரினதும் பிஸ்கட்டினதும் சுவை ...இந்த உலகில் எந்தத் தேநீருக்கும்,பிஸ்கட்டுக்கும் இல்லை. இத்தனைக்கும் என் குழந்தை அழவுமில்லை ஆர்ப்பாட்டம் செய்யவுமில்லை.

பெர்லின் முகாமில் இரண்டு மாதங்கள் இருந்து பின் பிரான்சுக்கு வந்தோம். அலை மோதும் கடலில் துடுப்பெடுத்து படகோட்டுவதற்கு ஒப்பானது ஒரு புதிய நாட்டில் நிலையூன்றுவது. எட்டு வருடங்கள் வரை நிரந்தர விஸா கிடைக்காததால் ,எந்த வித அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை. மொழி தெரியாததால் வேலை எடுக்க முடியவில்லை.இருந்த ஆங்கில அறிவுடன் கிடைத்த வேலையும், சொற்ப பணமும் அவ்வப்போது சாப்பிட மட்டுமே போதுமானதாக இருந்தது.

விடாமுயற்சி, ன்னம்பிக்கை என்பவற்றின் உதவியுடன் படிப்படியாக மொழியும் கற்று, பணமும் சம்பாரித்து , பிள்ளைகளையும் நல்ல வழியில் வழி நடத்தி வந்து விட்டேன்.

ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல்கள் பல என் வாழ்க்கைத் துணை. சலித்து விழுந்த காலங்களில் என்னை நிமிர்த்திய சில பாடல்களில் ஒன்று.




ஜனகன் எனது மகன் இன்று உலகின் பிரபலமான கார் கம்பெனி ஒன்றில் பொறியியலாளர். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஐரோப்பியப் பெண்ணுடன் காதல். பிறகென்ன தன்னை மறந்தான் தன் சுற்றம் மறந்தான் கதைதான்.

இருந்தாலும் தொடர்பை துண்டிக்காது வரவேற்று,உபசரித்து.... வழக்கமா பெற்ற பாசம் காரணமல்ல, மாறாக மகன் பிற்காலத்தில் கண்டிப்பாக அம்மாவின் சகிப்புத்தன்மையை உணர்வான் என்ற நம்பிக்கைதான்.

காலஓட்டத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும்"வரட்டோ,ரட்டோ "என்று கேட்கும்போது விளங்கவில்லை என்ன திடீர் அத்தறையென்று . ஏன் எனில் ஆரம்பத்தில் தொடர்பை முற்றாக துண்டிக்கும் முயற்சியும்
இருந்தது.

தமிழ் சிற்றுண்டிகள் ஜனகனுக்கு மிகவும் பிடிக்கும்,ஆகையால் அம்மா "வரட்டோ வரட்டோ" என்று வந்தான் . இருந்தாலும் தப்பும் தவறுமாக அம்மா கதைக்கும் பிரஞ்சும், அவளுடைய தோற்றமும் ஜனகனுக்கு அவனது வெள்ளைக் காதலியின் முன் அவமானமாக இருந்தது.பிழைகளைத் திருத்திக் கொண்டேயிருப்பான். கவலையும் சங்கடமும் தான்.

திடீரென்று ஒரு நாள் சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது" அம்மம்மா எத்தன வயதில செத்தவ" என்றான். திடுக்கிட்டுப் போனேன். இருந்தாலும் கவனியாதது போல் இருந்துவிட்டேன், மீண்டும் கேட்டான். என் அம்மா எப்படி ஆரோக்கியமாக எழுபத்தைந்து வயதுவரையும் வாழ்ந்தார் என்பதை அமைதியாக விளக்கினேன்.

கொடூரமான சிந்தனைகள் வரும்போது எத்தனை அழகான முகமும் எப்படி பயங்கரமாக மாறுகின்றது , என்பதை அன்று கண்டு கொண்டேன்.

காதல் ஓர்அழகான மன ஓட்டம், சுயநலமற்றது, ஆனால் இத்தனை கொடுரமானதா ?நம்பமுடியவில்லை.

மனக்காயத்துக்கு மருந்தூட்டிய ஒரு பாடல்.

Sunday, 14 July 2013

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

வணக்கம்

 ஆடி மாதம் 17ஆந் திகதி , தமிழ் ஆடி மாதப் பிறப்பு.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் , ஆனந்தம் ,தோழர்களே
கூடிப் பனங்கட்டி; கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு


வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே


பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே


குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே



வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே



வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே



ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

thanks: 
http://kanaga_sritha...adippirappu.htm 

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய இப் பாடல், தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதத்தின் முதல் நாள் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை விளக்குகின்றது. கூழ் என்ற உணவு இருவகைப்பட்டது. ஒன்று இனிப்பு மற்றது உறைப்பானது. இனிப்புக் கூழே ஆடி மாதம் காய்ச்சப்படும்.

இனிப்புக் கூழ் காய்ச்சும் முறை:

முழுப் பச்சைப் பயறு 200 கிராம்

சிவப்புப் பச்சை அரிசி மாவு 300 கிராம்

சர்க்கரை 200 கிராம்

இந்த அளவுகளில் மாற்றம் ஏற்பட்டால் எவ்வித பாதிப்பும் இல்லை. விரும்பினால் கொஞ்சம் பால் சேர்க்கலாம்.
செய்முறை- பயறை அவித்து ,அரிசிமாவை நீர் விட்டு கரைத்து இரண்டையும் கலந்து காய்ச்சி மாவு அவிந்து வரும் போது அதனுடன் நீர் விட்டுக் கரைத்த சர்கரையை அவித்த மாவுடன் கலந்து ஒருகொதியுடன் இறக்கலாம். இதைக் குடிக்கும்போது தேங்காயை சொட்டுக்களாக (துண்டுகளாக )வெட்டிப் போட்டு குடிக்கலாம் .கரண்டியில்லாத அந்த நாட்களில் பனம் பழத்தின் மூழ் கரண்டியாகப் பாவிக்கப்பட்டது.
கூழ் மிகவும் சுவையானது. மூழ் என்று இங்கு நாம் சொல்வது பனம் பழத்தின் மேல் பகுதியில் உள்ள தடித்த வெள்ளைப் பகுதி( கத்தரிக்காய்க்குள்ளது போல்) .


இத்தோடு கொழுக்கட்டையும் செய்யப்பட்டது. கொழுக்கட்டை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளதால் இதனை நாம் இங்கு கூறவில்லை.

எமது வலைப்பூ அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆடிப்பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.


தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com


---

Summary of the text given below:



Tomorrow is the 15th of July according the western calendar. But according to the Tamil calendar, tomorrow is the 1st of July. This day is called Aadyp Pirappu, which means July (Aady) Pirappu (Borning) !

This day is celebrated in Tamil Nadu and by all Tamils over the world. So, we are giving a song related to this day, written by Navaliyoor Somasuthara pulavar, born at Navaly, Manippay, Jaffna (Sri Lanka).

On this day, Tamils cook special sweet dishes called kool and kolukkaddai.

Sorry, we are unable to give you the Translation of the poem.

We wish you all happy « Aadyp pirappu »





Friday, 12 July 2013

பூதம் காத்த புத்தகங்கள் ( சிறுகதை)



வணக்கம்

இம்முறை இன்னுமொரு சிறுகதை . வாழ்வில் கணவனும், மனைவியும் கூடியவரை ஒருவர் மற்றவரின் அபிலாஷைகளை மதித்து வாழ வேண்டும். தவறினால் நிம்மதியான மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை கானல் நீர்


பூதம் காத்த புத்தகங்கள் ( சிறுகதை)


பானுமதி பாட்டியின் வீட்டில் (அவளின் அப்பா பெரும் சினிமாப் பைத்தியமாம் ) அலுமாரியில் அடுக்கி இருக்கும் நூல்களைப் பார்க்கும் போதெல்லாம் முரளியின் கண்கள் மின்னும். "கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் ' என்ற பழமொழி அந்த நவீன இளைஞனுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்ல மிகவும் பிடித்தமான பழமொழியாகவுமிருந்தது.


அந்த அலுமாரியில் எல்லா வகை நூல்களுமிருந்தன. ஆங்கில நூல்கள் ,தமிழ் வரலாற்று நாவல்கள்,வரலாற்று நூல்கள்,,எண்ணற்ற சமூக நாவல்கள், சினிமா,இன்னும் சமையல் ,சோதிடம், தத்துவம், புராணம் என பல . இதெல்லாம் அவனுடைய தாத்தாவின் கெலக்ஷ்ன். தாத்தா பெரும் வாசகன் . ஆனால் பாட்டிக்கோ ,
"ஒரு சோதனைக்குப் படிக்கலாம், பாஸ் பண்ணினால் நல்ல வேலை எடுக்கலாம் , சம்பாரிக்கலாம். அதைவிட்டுட்டு இதென்ன சும்மா எந்த நேரமும் கையில ஒரு புத்தகம் ".

முரளி இந்தக் கூத்தைப் பற்றிக் கேளவிப்பட்டே வளர்ந்தவ
ன். தாத்தாவின் வாசிக்கும் பழக்கம் பேரனுக்கு வந்துவிட்டது. பானுமதிப் பாட்டிக்குப் பேரன் மீது அபரிதமான அன்பு அதனால் கூடுமானவரை அதை சகித்துக் கொண்டாள்.


" ஒரு டீச்சருக்கு புத்தகங்கள் படிப்பது பிடிக்காது, இதெல்லாம் ஒரு டீச்சர், இந்தக் கிணற்றுத் தவழைகளிடம் படிக்கும் அந்தப் பிள்ளைகள் , ஐயோ பாவம்" முரளி யின் கருத்து

நான் மட்டும் இலங்கையின் கல்வி அமைச்சராயிருந்தால் , புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத எவரையும் ஆசிரியராக்க மாட்டேன்" மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.

ஒரு நல்ல நாள் பார்த்து , புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாத்தா மீது ஒரு வாளி தண்ணியை அப்படியே ஊற்றிவிட்டாளாம் பாட்டி.

தாத்தா எளிதில் வாய் திறப்பதில்லை , நடைப் பயணமாகவே அல்லது ( நடைப் பிணமாகவே )கிளம்பிவிட்டாராம்  வெளி நாட்டுக்கு. நடைப் பயணம் என்றால் ஓவர் லாண்டாக .இந்தியா, பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான், துருக்கி இப்படி ஐரோப்பாவுக்குள் நுழைந்துவிட்டார்.

இதைச் செய்யும் போது அவருக்கு 40 வயது.

பிறகென்ன, வெளி நாட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தொடங்கிய தாத்தாவுக்கு மனைவியின் நினைவு , எப்பவாவது வரும்.

வாழ்க்கைக்கு தேவையான பணம் மட்டும் பானுமதிக்கு வரும் .

பிள்ளைகள் கண்ணில் அம்மா தான் எல்லாம் செய்யிறா, கஸ்டப்படுரா .
மகன் இரஜீவன், பதினைந்து வயதிலேயே "அப்பா என்ன செய்தவர், நான் தான் எல்லாம் செய்தனான் என்று அட்டகாசமாக அம்மாவையும் தங்கையையும் ஆளத்தொடங்கினான்.

அம்மா ," அப்பா என்ன செய்தவர் ஒண்டும் செய்யல்ல" என்று சொல்லிச் சொல்லியே வளர்த்ததன் பலன்.

மகனும், மகளும் படித்து, வேலை எடுத்து திருமணம் செய்து கொண்டு போய் விட்டனர். பானுமதிக்குத் தனிமை . அந்த அலுமாரியில் புத்தகங்கள் அப்படியே ஆண்டாண்டு காலமாக இருந்து , தூசி படிந்து.... யாருக்கும் இரவல் கொடுக்கும் பழக்கம் அவளுக்கில்லை. தாத்தாவின் அக்கா, தங்கைமார் நிறையவே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனாலும் அண்ணணின் அலுமாரியைத் தொடக்கூடப் பயந்தனர் .


ஒரு நாள் கண்ணாடியூடாக ப் பார்த்த மைத்துனி சாயாதேவி Secret life of Nehru என்ற நூலைப் பற்றி ஆவலுடன் அண்ணியிடம் "அதை வாசிச்சனீங்களோ "என்று கேட்க, "ஓம் ஓம் இப்ப வாசிச்சுக் கொண்டிக்கிறன் " அண்ணிக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது .

இன்னுமொரு நாள் எழுத்தாளர் பிரபஞ்சனின் " வானம் வசப்படும் "மேசை மீதிருந்தது ; சாயா கையில் எடுத்தாள் , உடனே,  " அது நான் வாசிச்சுக் கொண்டிருக்கிறன் ".

இப்படி அந்த புத்தகங்களை ஒரு பூதம் காத்தது . அதைப் பார்க்கும் போதெல்லாம்......சாயா , கண்களைத் துடைத்துக் கொள்வாள்.

முரளி லண்டனுக்குப் பயணமானான் ; "நீயும் என்னை விட்டிட்டுப் போறியே குஞ்சு" கண்ணீர் மல்கியது பானுமதிக்கு.

"அம்மம்மா, தாத்தான்ர புத்தகங்களிருக்கு".

தூசி படிந்த புத்தகங்கள் ….படிப்பாரற்ற நூல்கள்.....உயிரிழந்த மனிதர்கள் போல் !

தொடர்பு கொள்க: kalyanam.cheyugal@gmail.com

Summary of the short story given above.


This story “Pootham kaaththa puththakangal”, which means “Books protected by a phantom”, tells how a wife refused to respect her husband's reading habit, and his leaving her forever. She is unable to change her character and finally she is alone with the shelf of books collected by her husband. She's left with the sorrow just because she couldn't adapt the give and take policy in her marriage life.


The books kept in the shelf left unread and even not lent to anybody could be like dead bodies