Sunday, 14 July 2013

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

வணக்கம்

 ஆடி மாதம் 17ஆந் திகதி , தமிழ் ஆடி மாதப் பிறப்பு.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் , ஆனந்தம் ,தோழர்களே
கூடிப் பனங்கட்டி; கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு


வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே


பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே


குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே



வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே



வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே



ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

thanks: 
http://kanaga_sritha...adippirappu.htm 

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய இப் பாடல், தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதத்தின் முதல் நாள் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை விளக்குகின்றது. கூழ் என்ற உணவு இருவகைப்பட்டது. ஒன்று இனிப்பு மற்றது உறைப்பானது. இனிப்புக் கூழே ஆடி மாதம் காய்ச்சப்படும்.

இனிப்புக் கூழ் காய்ச்சும் முறை:

முழுப் பச்சைப் பயறு 200 கிராம்

சிவப்புப் பச்சை அரிசி மாவு 300 கிராம்

சர்க்கரை 200 கிராம்

இந்த அளவுகளில் மாற்றம் ஏற்பட்டால் எவ்வித பாதிப்பும் இல்லை. விரும்பினால் கொஞ்சம் பால் சேர்க்கலாம்.
செய்முறை- பயறை அவித்து ,அரிசிமாவை நீர் விட்டு கரைத்து இரண்டையும் கலந்து காய்ச்சி மாவு அவிந்து வரும் போது அதனுடன் நீர் விட்டுக் கரைத்த சர்கரையை அவித்த மாவுடன் கலந்து ஒருகொதியுடன் இறக்கலாம். இதைக் குடிக்கும்போது தேங்காயை சொட்டுக்களாக (துண்டுகளாக )வெட்டிப் போட்டு குடிக்கலாம் .கரண்டியில்லாத அந்த நாட்களில் பனம் பழத்தின் மூழ் கரண்டியாகப் பாவிக்கப்பட்டது.
கூழ் மிகவும் சுவையானது. மூழ் என்று இங்கு நாம் சொல்வது பனம் பழத்தின் மேல் பகுதியில் உள்ள தடித்த வெள்ளைப் பகுதி( கத்தரிக்காய்க்குள்ளது போல்) .


இத்தோடு கொழுக்கட்டையும் செய்யப்பட்டது. கொழுக்கட்டை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளதால் இதனை நாம் இங்கு கூறவில்லை.

எமது வலைப்பூ அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆடிப்பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.


தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com


---

Summary of the text given below:



Tomorrow is the 15th of July according the western calendar. But according to the Tamil calendar, tomorrow is the 1st of July. This day is called Aadyp Pirappu, which means July (Aady) Pirappu (Borning) !

This day is celebrated in Tamil Nadu and by all Tamils over the world. So, we are giving a song related to this day, written by Navaliyoor Somasuthara pulavar, born at Navaly, Manippay, Jaffna (Sri Lanka).

On this day, Tamils cook special sweet dishes called kool and kolukkaddai.

Sorry, we are unable to give you the Translation of the poem.

We wish you all happy « Aadyp pirappu »