வணக்கம்
1975 வரை இலங்கையில் கோயில்களில் இசைக் கச்சேரிகள், சின்னமேளம் என்றழைக்கப்பட்டவர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், இலக்கிய சமயப் பேச்சாளர்களின் பிரசங்கங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. யாருடைய திருவிழாவுக்கு பிரபலங்கள் வருகின்றார்கள் என்பதில் பெரும் போட்டியே இருக்கும்.
இரவு 11 மணியளவில் தான் நாட்டியப் பெண்மணிகள் வருவார்கள். உள்ளூர் பெண்களும் பலர் இத் தொழிலில் இருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் சின்ன மேளங்கள் வருவதாகப் பேசிக் கொண்டார்கள் .ரேடியோவில் பாட்டுப் போட்டாலொழிய மற்றும்படி பாட்டுக் கேட்க முடியாத காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு . இரவு, இருட்டில் நாட்டியப் பெண்கள் பளபளப்பான உடைகள், பூமாலை, பவுடர் பூச்சு,நகையலங்காரங்களுடன் வரும் போது எல்லா முகங்களும் அவர்களையே நோக்கும், ஏதோ சொர்க்கத்திலிருந்து தேவதைகள் வருவது போல் !
இதைவிட நாதஸ்வர, தவில் கச்சேரிகளும் பிரபலமாக இருந்தன. இச் சமயத்தில் 1960 அளவில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளியானது. இது திரு. கொத்தமங்கலம் சுப்பு என்ற மிகப் புகழ் பெற்ற எழுத்தாளரால் ஆனந்தவிகடன் வார இதழில் கலைமணி என்ற புனை பெயரில் தொடர் கதையாக வந்து புகழ் பெற்ற நாவல். இக் கதை ஒரு நாட்டியப் பெண்ணுக்கும் நாதஸ்வர இசைக் களைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட காதலைப் பற்றியது!
இப் படத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராக திரு சிவாஜிஅவர்களும் திரு ஏ வி எம் இராஜன் அவர்களும் நடித்த போது அவ்விருவருக்கும் பின்னனியாக நாதஸ்வரம் வாசிப்பதற்கு , அப்போது பிரபலமாக இருந்த மதுரை திரு பி. என் சேதுராமன்,பொன்னுசாமி சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் இசை அமைத்த இத் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது.
இப் படத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராக திரு சிவாஜிஅவர்களும் திரு ஏ வி எம் இராஜன் அவர்களும் நடித்த போது அவ்விருவருக்கும் பின்னனியாக நாதஸ்வரம் வாசிப்பதற்கு , அப்போது பிரபலமாக இருந்த மதுரை திரு பி. என் சேதுராமன்,பொன்னுசாமி சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் இசை அமைத்த இத் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது.
சந்து பொந்தெல்லாம் எந்நேரமும்" நலந்தானா நலந்தானா" பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது வரும் பிரபல படங்களின் பாட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு பாட்டுப் புத்தகங்கள் விற்கப்பட்டன.கதை வசனமும் தனியாக அச்சிடபபட்டு விற்கப்பட்டது.
கரவெட்டி கிழக்கு யார்க்கரு விநாயகர் ஆலயம்
1963ம் ஆண்டு யாழ். கரவை யார்க்கரு விநாயகர் திருவிழா வந்த போது ஏழாம் திருவிழா உபயகாரர்களுக்கு பிரபல நாதஸ்வர வித்துவான்கள் திரு சேதுராமன் ,பொன்னுசாமி அவர்களை கரவெட்டி கிழக்குக்கு அழைத்து வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
இக்காலங்களில் இந்தியக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வர மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களால் மட்டுமே முடியும். அவ்வாறு உயர் பதவிகளில் ,கீழ்க்கரவையைச் சேர்ந்த பலரும் இருந்ததால் இந் நாதஸ்வரக் கச்சேரி சாத்தியமாயிற்று.
படத்தில் காணப்படும் கீழ் கரவை யார்க்கரு விநாயகர் கோயில் வரலாறு காணாத பெருங் கூட்டம் கண்டது. திரு பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்களை , வரவேற்கவும், அவர்களது இசையை இரசிக்கவும் யாழ் மாவட்டமே யார்க்கருவில் கூடியது.இரவு எட்டு மணியிலிருந்தே "இதோ வந்துவிட்டார்கள்,நாதஸ்வர வித்துவான்கள்,தில்லானா மோகனாம்பாள் புகழ் சேதுராமன் பொன்னுசாமி அவர்கள்"என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு முறையும் தலையை நிமிர்த்திப் பார்ப்பதும் ஏமாறுவதுமாக இருந்தனர் மக்கள்.
எப்பொழுதும் போல் இரவு 11 மணியளவில் இரு நாதஸ்வரக் கலைஞர்களும் வந்தனர். உபயகாரரால் இவர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். மிகவும் அழகான தோற்றமுடைய இவர்களில் திரு. சேதுராமன் அவர்கள் உயரமானவராகவும் அவரது இளவல் சற்று உயரம் குறைந்தவராகவும் இருந்தார்.
இவர்கள் வந்த உடனேயே "நலந்தானா" பாடல் இசைக்கப்படும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாக இருந்தது. ஆனால் பலருக்கும் புரியாத இராகங்கள் இசைக்கப்பட்டன. இரசிகர்கள் கூட்டம் ஆர்வம் இழந்து சோர்ந்து போகும் போதெல்லாம் "நலந்தானா "பாடல் இராகம் இசைக்கப்பட்டது.மக்கள் கூட்டம் உற்சாகமாக தலையை நிமிர்த்தியதும் உடனே ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த, அனேகருக்குப் புரியாத இராக ஆலாபனை தொடரப்பட்டது..
இப்படியாக நடந்த இசைவிழா அதிகாலை நான்கு மணியளவில் உண்மையாகவே "நலந்தானா" பாடல் இசைக்கப்பட்டு, நாதஸ்வரக் கலைஞர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவேறியது.
விடிந்ததும் பார்த்தால் யார்க்கரு விநாயகர் கோயில் சுற்று வட்டாரம் முழுவதும் ஏகப்பட்ட மோட்டார் கார்களும், துவிச்சக்கர வண்டிகளும் குப்பை கூழங்களுமாகயிருந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்காததால், குடிபானப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இரவு முழுவதும் அயல் கிராமங்களான மந்திகை,நெல்லியடி, பகுதிகளில் மூடியிருந்த கடைகளை திறக்கச் செய்து யானை மார்க் சோடாப்புட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டன.
யார்க்கரு கோயிலுக்கு முன் ஒர் அரச மரம் உள்ளது. இதன் கிளைகளில் நூற்றுக்கணக்கான இரசிகர்கள் இரவு ஏறி அமர கொப்பொன்று முறிய,விழுந்தவர்கள் காயம் ஏதுமின்றித் தப்பினார்கள்!
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com