Friday, 12 July 2013

பூதம் காத்த புத்தகங்கள் ( சிறுகதை)



வணக்கம்

இம்முறை இன்னுமொரு சிறுகதை . வாழ்வில் கணவனும், மனைவியும் கூடியவரை ஒருவர் மற்றவரின் அபிலாஷைகளை மதித்து வாழ வேண்டும். தவறினால் நிம்மதியான மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை கானல் நீர்


பூதம் காத்த புத்தகங்கள் ( சிறுகதை)


பானுமதி பாட்டியின் வீட்டில் (அவளின் அப்பா பெரும் சினிமாப் பைத்தியமாம் ) அலுமாரியில் அடுக்கி இருக்கும் நூல்களைப் பார்க்கும் போதெல்லாம் முரளியின் கண்கள் மின்னும். "கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் ' என்ற பழமொழி அந்த நவீன இளைஞனுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்ல மிகவும் பிடித்தமான பழமொழியாகவுமிருந்தது.


அந்த அலுமாரியில் எல்லா வகை நூல்களுமிருந்தன. ஆங்கில நூல்கள் ,தமிழ் வரலாற்று நாவல்கள்,வரலாற்று நூல்கள்,,எண்ணற்ற சமூக நாவல்கள், சினிமா,இன்னும் சமையல் ,சோதிடம், தத்துவம், புராணம் என பல . இதெல்லாம் அவனுடைய தாத்தாவின் கெலக்ஷ்ன். தாத்தா பெரும் வாசகன் . ஆனால் பாட்டிக்கோ ,
"ஒரு சோதனைக்குப் படிக்கலாம், பாஸ் பண்ணினால் நல்ல வேலை எடுக்கலாம் , சம்பாரிக்கலாம். அதைவிட்டுட்டு இதென்ன சும்மா எந்த நேரமும் கையில ஒரு புத்தகம் ".

முரளி இந்தக் கூத்தைப் பற்றிக் கேளவிப்பட்டே வளர்ந்தவ
ன். தாத்தாவின் வாசிக்கும் பழக்கம் பேரனுக்கு வந்துவிட்டது. பானுமதிப் பாட்டிக்குப் பேரன் மீது அபரிதமான அன்பு அதனால் கூடுமானவரை அதை சகித்துக் கொண்டாள்.


" ஒரு டீச்சருக்கு புத்தகங்கள் படிப்பது பிடிக்காது, இதெல்லாம் ஒரு டீச்சர், இந்தக் கிணற்றுத் தவழைகளிடம் படிக்கும் அந்தப் பிள்ளைகள் , ஐயோ பாவம்" முரளி யின் கருத்து

நான் மட்டும் இலங்கையின் கல்வி அமைச்சராயிருந்தால் , புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத எவரையும் ஆசிரியராக்க மாட்டேன்" மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.

ஒரு நல்ல நாள் பார்த்து , புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாத்தா மீது ஒரு வாளி தண்ணியை அப்படியே ஊற்றிவிட்டாளாம் பாட்டி.

தாத்தா எளிதில் வாய் திறப்பதில்லை , நடைப் பயணமாகவே அல்லது ( நடைப் பிணமாகவே )கிளம்பிவிட்டாராம்  வெளி நாட்டுக்கு. நடைப் பயணம் என்றால் ஓவர் லாண்டாக .இந்தியா, பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான், துருக்கி இப்படி ஐரோப்பாவுக்குள் நுழைந்துவிட்டார்.

இதைச் செய்யும் போது அவருக்கு 40 வயது.

பிறகென்ன, வெளி நாட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தொடங்கிய தாத்தாவுக்கு மனைவியின் நினைவு , எப்பவாவது வரும்.

வாழ்க்கைக்கு தேவையான பணம் மட்டும் பானுமதிக்கு வரும் .

பிள்ளைகள் கண்ணில் அம்மா தான் எல்லாம் செய்யிறா, கஸ்டப்படுரா .
மகன் இரஜீவன், பதினைந்து வயதிலேயே "அப்பா என்ன செய்தவர், நான் தான் எல்லாம் செய்தனான் என்று அட்டகாசமாக அம்மாவையும் தங்கையையும் ஆளத்தொடங்கினான்.

அம்மா ," அப்பா என்ன செய்தவர் ஒண்டும் செய்யல்ல" என்று சொல்லிச் சொல்லியே வளர்த்ததன் பலன்.

மகனும், மகளும் படித்து, வேலை எடுத்து திருமணம் செய்து கொண்டு போய் விட்டனர். பானுமதிக்குத் தனிமை . அந்த அலுமாரியில் புத்தகங்கள் அப்படியே ஆண்டாண்டு காலமாக இருந்து , தூசி படிந்து.... யாருக்கும் இரவல் கொடுக்கும் பழக்கம் அவளுக்கில்லை. தாத்தாவின் அக்கா, தங்கைமார் நிறையவே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனாலும் அண்ணணின் அலுமாரியைத் தொடக்கூடப் பயந்தனர் .


ஒரு நாள் கண்ணாடியூடாக ப் பார்த்த மைத்துனி சாயாதேவி Secret life of Nehru என்ற நூலைப் பற்றி ஆவலுடன் அண்ணியிடம் "அதை வாசிச்சனீங்களோ "என்று கேட்க, "ஓம் ஓம் இப்ப வாசிச்சுக் கொண்டிக்கிறன் " அண்ணிக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது .

இன்னுமொரு நாள் எழுத்தாளர் பிரபஞ்சனின் " வானம் வசப்படும் "மேசை மீதிருந்தது ; சாயா கையில் எடுத்தாள் , உடனே,  " அது நான் வாசிச்சுக் கொண்டிருக்கிறன் ".

இப்படி அந்த புத்தகங்களை ஒரு பூதம் காத்தது . அதைப் பார்க்கும் போதெல்லாம்......சாயா , கண்களைத் துடைத்துக் கொள்வாள்.

முரளி லண்டனுக்குப் பயணமானான் ; "நீயும் என்னை விட்டிட்டுப் போறியே குஞ்சு" கண்ணீர் மல்கியது பானுமதிக்கு.

"அம்மம்மா, தாத்தான்ர புத்தகங்களிருக்கு".

தூசி படிந்த புத்தகங்கள் ….படிப்பாரற்ற நூல்கள்.....உயிரிழந்த மனிதர்கள் போல் !

தொடர்பு கொள்க: kalyanam.cheyugal@gmail.com

Summary of the short story given above.


This story “Pootham kaaththa puththakangal”, which means “Books protected by a phantom”, tells how a wife refused to respect her husband's reading habit, and his leaving her forever. She is unable to change her character and finally she is alone with the shelf of books collected by her husband. She's left with the sorrow just because she couldn't adapt the give and take policy in her marriage life.


The books kept in the shelf left unread and even not lent to anybody could be like dead bodies